சுங்க கட்டணம் தொடர்பாக இப்போது புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உரிய நேரத்தில் சுங்க கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதுடன், வாகனங்களுக்கான பல முக்கிய சலுகைகளும் கட்டாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாடு முழுக்க உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறையில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண வசூல் முறையை மேம்படுத்தவும் பயணிகள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் இதில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வருகிறது. தற்போது நாட்டில் 98 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஏற்கனவே FASTag முறையைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 1,44,634 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச் சாவடிகள் இயங்கி வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதே போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக உயர்த்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது. வணிக பயன்பாடு இல்லாத வாகனங்களுக்கு மட்டுமே ஆண்டு சந்தா கட்டண முறை உள்ள நிலையில் தான் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய விதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வந்துள்ள திருத்தப்பட்ட விதிகளின் கீழ், தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2026 மார்ச் 17ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. அந்தவகையில் சுங்கச்சாவடியை ஒரு வாகனம் கடந்து செல்லும்போது சில காரணங்களால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றால் அதை வசூலிக்கவே இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் போது சில காரணங்களால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனில் அந்த நிலுவைத் தொகையை வசூலிக்க, அதிகாரிகள் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு வாகன விவரங்கள், சுங்கச்சாவடியைக் கடந்த தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், மொபைல் செயலிகள் அல்லது ஒரு ஆன்லைன் போர்ட்டல் வழியாக இ-நோட்டீஸ் ஒன்றை அனுப்புவார்கள்.
இந்த மின்னணு அறிவிப்பு கிடைத்த 72 மணி நேரத்திற்குள் வாகன உரிமையாளர் கட்டணத்தை செலுத்தினால் கூடுதல் கட்டணமோ அல்லது அபராதமோ கிடையாது. அதேசமயம் 72 மணி நேரக் காலக்கெடுவைத் தாண்டினால் நாம் செலுத்த வேண்டிய தொகை இரட்டிப்பாகும்.
ஒருவேளை நீங்கள் அந்த சுங்கச்சாவடியை கடக்கவில்லை தவறுதலாக உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், வாகன உரிமையாளர்கள் இ-நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் ஆட்சேபனையைப் பதிவு செய்யலாம்.
அப்படி பதிவு செய்யும்பட்சத்தில் அதிகாரிகள் இந்த புகாரை ஐந்து நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். அதாவது உங்கள் வாகனம் தான் என்று உறுதிசெய்யப்பட்டால் நீங்கள் அந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒருவேளை 20 நாட்களில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றால் சுங்க கட்டணம் தானாகவே ரத்து செய்யப்படும்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமாக விஷயம் என்னவென்றால், இ-நோட்டீஸ் கிடைத்து 15 நாட்களாகியும் உங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த தவறினால், செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள் VAHAN தளத்தில் பதிவு செய்யப்படுவதுடன் நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, வாகன மாற்றம் அல்லது புதுப்பித்தல் போன்ற வாகன தொடர்பான சேவைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
இந்தியாவின் தடையற்ற சுங்கச்சாவடி முறையை நோக்கி நகரும் நிலையில், டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் முறையை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கை முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.