

வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கரை இனி பிய்த்து எடுக்காமலேயே, நீங்கள் விரும்பும் புதிய வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் தங்களின் அசல் NETC FASTag மற்றும் Tag ID-ஐ மாற்றாமல், சேவை வழங்கும் வங்கியை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் OneTag என்ற FASTag வசதியை NHAI அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, நாம் எப்படி நமது செல்போன் எண்ணை மாற்றாமல் ஏர்டெல், ஜியோ என நிறுவனங்களின் சேவையை மாற்ற முடியுமோ, அதுபோல் இப்போது பாஸ்டேக்கிற்கும் போர்ட்டபிலிட்டி வசதி வந்துள்ளது.
அதாவது, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள 'OneTag' என்பது வாகன ஓட்டிகள் தங்களின் FASTag ஸ்டிக்கரையோ அல்லது Tag ID-யையோ மாற்றாமல், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை (Issuer Bank) எளிதாக மாற்றிக்கொள்ளும் (Portability) ஒரு புதிய தொழில்நுட்ப வசதியாகும்.
இதன் மூலம், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் உள்ள தற்போதைய FASTag-ஐ அகற்றாமலோ அல்லது புதியதைப் பெறாமலோ, தங்களது FASTag வழங்கும் வங்கியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP) போன்ற இந்த வசதியை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவில் (Global Fintech Fest) தொடங்கி வைத்தார்.
இந்த சேவை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ ராஜ்மார்க்யாத்ரா (Rajmargyatra)மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் இயங்கும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த 'OneTag' போர்ட்டபிலிட்டி சேவையை உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள நடைமுறைப்படி, FASTag வழங்கிய வங்கியை மாற்ற விரும்பினால், பழைய ஸ்டிக்கரை ரத்து செய்துவிட்டு, புதிய வங்கியில் விண்ணப்பித்து புதிய ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்ட வேண்டும். ஆனால் 'OneTag' திட்டத்தின் மூலம், காரில் உள்ள அதே ஸ்டிக்கர் மற்றும் அதே FASTag ID அப்படியே இருக்கும்; வங்கி சேவை மட்டுமே புதிய வங்கிக்கு மாறும்.
உங்கள் FASTag வழங்கும் வங்கியை மாற்றுவது எப்படி:
நீங்கள் ராஜ்மார்க்யாத்ரா செயலியில் உள்நுழைந்து உங்கள் வாகனப் பதிவு எண்ணை (Vehicle Registration Number) உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு, நீங்கள் உள்ளிட்ட வாகனப் பதிவு எண் தகுதியானதா இல்லையா என்பதை FASTag-இன் அமைப்பு சரிபார்க்கும்.
உங்கள் தகுதி உறுதிசெய்யப்பட்டவுடன், தற்போதுள்ள கடன் வழங்கும் வங்கி, அங்கீகாரத்திற்காக 6 இலக்க மொபைல் சரிபார்ப்புக் குறியீட்டை MVC - Mobile Verification Code) அனுப்பும்.
சரிபார்ப்பு முடிந்து, வாடிக்கையாளரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, தங்களுக்கு விருப்பமான புதிய வங்கியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
போர்ட்டபிலிட்டி செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், தற்போதுள்ள FASTag ID மற்றும் வாகனப் பதிவு எண் ஆகியவை மாற்றமின்றி அப்படியே இருக்கும். தற்போதுள்ள ஃபாஸ்டேக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இனிமேல் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பழைய FASTag ஸ்டிக்கரை பிரிக்கவோ அல்லது புதிய ஸ்டிக்கர் வாங்கவோ தேவையில்லை.
பயனர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒருமுறை வங்கியினை மாற்றிய பின், மீண்டும் மற்றொரு வங்கிக்கு மாற (Cooling Period) 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
புதிய வங்கிக்கு மாறும்போது பழைய வங்கியின் FASTag வாலட் மூடப்பட்டு, வாலட்டில் மீதமுள்ள நிலுவைத் தொகை மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டு, சில நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.
NHAI அறிமுகப்படுத்தியுள்ள 'OneTag' சேவையானது, FASTag பயனர்களுக்கு வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் தேர்வுகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்றொரு வங்கிக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள், தற்போதுள்ள ஸ்டிக்கரை அகற்றாமலோ அல்லது மற்றொரு FASTag-ஐப் பெறாமலோ இந்தச் செயல்முறையை முடிக்கலாம்.
'OneTag' மூலம் தங்கள் FASTag வழங்கும் புதிய வங்கியில் இணையும்போது பயனர்கள், மீண்டும் KYC செயல்முறையை சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போதைய வங்கியின் சேவைகளில் திருப்தி இல்லாத வாகன ஓட்டிகள், அல்லது மற்றொரு வங்கியின் ஃபாஸ்டேக் தொடர்பான சேவைகளைப் பெற விரும்பினால், இனி எவ்வித சிரமமும் இன்றி எளிய முறையில் 'OneTag' வழியாக வங்கியினை மாற்றிக் கொள்ளலாம்.