தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவது வழக்கமான நடைமுறை. அனைத்து வாகன ஓட்டிகளிடமும் சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்கான இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் போது ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் விதமாக FASTag நடைமுறை கொண்டு வரப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் எல்லா வாகனங்களிலும் FASTag கருவி பொருத்துவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்த கருவி இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்தப்படும். இரு மடங்கு அதிகமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் FASTag செயல்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.
அந்த வகையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’(FASTag) மூலம் கட்டணம் கழித்துகொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் மின்னணு சுங்கக் கட்டண வசூல் அமைப்பின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், FASTag கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை (VRNs) உடனடியாகச் சரிபார்க்குமாறு, அனைத்து FASTag வழங்கும் வங்கிகளுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உத்தரவிட்டுள்ளது. இதில் தவறான பதிவெண்களுடன் இணைக்கப்பட்ட FASTagகளை முடக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனெனில் FASTag ஸ்கேனர்களால் பதிவு செய்யப்படும் வாகனப் பதிவு எண், உண்மையில் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் (number plate) உள்ள பதிவெண்களுக்கும் பொருந்தாமல் இருப்பது குறித்துப் பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வரிஏய்ப்பு நடந்து அரசின் வருவாய் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தவறான அல்லது செல்லாத பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்படும் எந்தவொரு FASTag-ம், அரசாங்க வழிகாட்டுதல்களின்படி 'கருப்புப் பட்டியலில்' (blacklisted) சேர்க்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்னணு சுங்கக் கட்டண வசூல் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், இணக்கத்தை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், அதே நேரத்தில் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று அரசாங்கம் கூறியது.
மேலும் Multi-Lane Free Flow (MLFF) சுங்கக் கட்டண வசூல் முறை போன்ற வரவிருக்கும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், வாகனப் பதிவு எண்களை FASTags உடன் துல்லியமாகப் பொருத்துவது (mapping) மிகவும் இன்றியமையாதது என்று NHAI வலியுறுத்தியுள்ளது. இம்முறையின் கீழ், சுங்கக் கட்டண வசூல் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள்—விதிமீறுபவர்களுக்கு மின்னணு அறிவிப்புகளை அனுப்புவது ஆகியவை வாகனங்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்பதையே பெரிதும் சார்ந்திருக்கும்.