

பண்டைய காலங்களில் கப்பல் கட்டும் முறை வியக்கத்தக்க வகையில் இருந்தது. குறிப்பாக இந்தியா, அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தையல் முறை கப்பல்கள் அப்போது பிரபலமாக இருந்தன. இவை பாய்மரக் கப்பல்கள் என அழைக்கப்பட்டது.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பாய்மர கப்பலின் வரலாற்று சிறப்பை இன்றைய தலைமுறை உணரும் வகையில் அதே பண்டைய தொழில்நுட்பத்துடன் ஒரு பாய்மர கப்பலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஐ என் எஸ் வி கௌண்டியா என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் நவீன காலத்து கப்பலில் இருக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இன்ஜின் இல்லாமல் முழுக்க முழுக்க பாய்மர தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் சிறப்பு என்னவென்றால் மரப்பலகைகளை ஆணிகள் மூலம் இணைக்காமல் தேங்காய் நார் மற்றும் இயற்கை இலைகளால் இணைத்துள்ளனர். அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் பாய்மரக் கப்பலை போலவே இந்த கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பண்டைய கால நூல்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எழுதி வைத்த குறிப்புகளையும் பின்பற்றி இந்த கப்பலை உருவாக்கியுள்ளனர்.
அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கப்பல் கட்டுமான தொழில் நுட்பத்தை இந்த காலத்திற்கு நகலெடுத்து உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐ என் எஸ் வி கௌண்டியா பாய்மரக்கப்பல் நம் நாட்டின் பண்டைய வர்த்தக நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மேற்காசிய நாடான ஓமன் கடற்கரை வரை தன் பயணத்தை துவக்கி உள்ளது. இந்தியாவுக்கான ஓமன் தூதர் இஸ்ரோசலே அல் ஷிபானி முன்னிலையில் நம் மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் கிருஷ்ணசாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பண்டைய கால நாகரிகத்துடன் பயணிக்கும் பாய் மரக்கப்பல் குழுவினருக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கப்பலின் விசேஷம் என்னவென்றால் இதற்கு இன்ஜின் கிடையாது. இரும்புகளும் கிடையாது.
கப்பலுக்குள் தண்ணீர் போகாமல் இருக்க இயற்கை பிசின்கள் பருத்தி மற்றும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையை சார்ந்தது என்றாலும் போர்க்கப்பல் அல்ல.
இந்த கப்பல் 64 அடி நீளம் 22 அடி அகலம் கொண்டது. உலோகத்தை தவிர்க்கும் டன் காய் என்னும் பாரம்பரிய இந்திய முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதை கேரளாவைச் சேர்ந்த முதன்மை கப்பல் கட்டும் வல்லுனர் பாபு சங்கரன் தலைமையிலான பாரம்பரிய கைவினை கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் நிலைத்தன்மையை உறுதி செய்ய சென்னை ஐஐடி எனப்படும் இந்திய தொழில் நுட்ப மையத்தால் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்தக் கப்பலில் கடம்ப வம்சத்தின் இருதலை பறவையான கண்ட பிரண்டா, பாய்மரங்களில் சூரியன் சின்னங்கள், கப்பலின் முகப்பில் சிம்மயாழி சிலை, ஹரப்ப காலத்தின் கல் நங்கூரம் போன்ற இந்தியாவின் கடல்சார் வரலாற்றை குறிக்கும் பல்வேறு சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பல் கட்டும் திட்டம் கோடி இன்னோவேஷன்ஸ் அமைப்பு மூலம் 2023-ல் துவங்கியது.
இந்த ஓமன் பயணம் ஏனென்றால் தென்கிழக்கு ஆசியா வரையிலும் உள்ள வழித்தடம் ஒரு காலத்தில் முக்கிய வர்த்தக பாதையாக இருந்தது. இந்திய வணிகர்களும், மாலுமிகளும் இந்த கடல் வழியை பயன்படுத்தி மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா உடன் மசாலா பொருட்கள், துணிகள் உள்ளிட்டவை வர்த்தகம் செய்து வந்தனர். எனவே இந்த இடத்தை மீண்டும் தேர்வு செய்துள்ளனர். கிபி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய மாலுமியான கவுண்டியா என்பவரின் நினைவாக இந்த கப்பலுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.