
கடந்த சில ஆண்டுகளாக இரயில் விபத்துகள் அதிகரித்து வரும் வேளையில், இன்று கடலூரில் நடந்த இரயில் விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலூரில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று இரயில்வே கேட்டை கடக்க முற்பட்ட போது, விழுப்புரம் - மயிலாடுதுறை இரயில் மோதியது. இந்த விபத்தில் 50மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட வேனில் இருந்த சாருமதி (16), செழியன் (15) மற்றும் விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதில் சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர் சங்கர் (47), மாணவர்கள் விஷ்வேஸ் (16) மற்றும் நிவாஸ் (13) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேட் கீப்பர் அலட்சியத்தால் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆனால், கேட்டை மூட அவர் முற்படும் போது, இரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விடுகிறேன் என ஓட்டுநர் சொன்னதாகவும், இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் இரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் சற்று பொறுமையாக காத்திருந்தால் இப்படியொரு கோர விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என பொதுமக்கள் வேதனையாக கூறுகின்றனர்.
கடலூரில் நிகழ்ந்த இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஆறுதலைத் தெரிவித்து, ரூ.5 இலட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்து உள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 இலட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். அதோடு இரயில்வே நிர்வாகமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
இரயில் வருவது தெரிந்தும் கூட செம்மங்குப்பம் இரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக காவல் துறை பங்கஜ் சர்மாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.