

டெல்லி, அசாம், ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஏற்கனவே காற்று மாசு மாட்டால் அவதிப்பட்டு வரும் தலைநகர் டெல்லிக்கு, பனிமூட்டம் மற்றொரு அச்சிறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
அதிக பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிக பனிப்பொழிவு காரணமாக உத்திரப்பிரதேசம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் பனிப்பொழிவு மேலும் அதிகமானதோடு, கடுமையான குளிர் நிலவுவதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு 8 விமானங்கள் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இது தவிர 200 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டு சென்றன.
கடுமையான பனிப்பொழிவால், விமான போக்குவரத்து மட்டுமின்றி, டெல்லியில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 100-க்கும் மேற்பட்ட ரயில்கள், கடந்த சில நாட்களாகவே காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் தங்களது பயண நேரத்தை உறுதி செய்த பின்னர் விமான நிலையங்களுக்கு வர வேண்டுமென விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சாலைப் போக்குவரத்தும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக பயணிக்குமாறு டெல்லி போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது. பனிமூட்டம் நீங்கி தெளிவான பாதை தெரியும் வரை, வாகனங்களை மெதுவாக இயக்கினால் தான் விபத்துகளை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. ஆகையால் இனி ஒரு சாலை விபத்து நடக்க கூடாது என போக்குவரத்து துறை முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது
அதீத பனிப்பொழிவு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பனிப்பொழிவுடன் சேர்ந்து, காற்றின் தரமும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக நேற்று ஆனந்த் விஹார் என்ற பகுதியில் காற்றின் தர குறியீடு 459 ஆக பதிவாகியுள்ளது.