
செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் பிரம்மாண்ட மிதக்கும் உணவக கப்பல் தயார் செய்யப்பட்டது. அதிகமான சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டடுக்கு உணவகக் கப்பல் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் கொச்சினைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக இப்படியொரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன. வாரம் முழுக்க அனைத்து நாள்களிலும் இந்த கப்பல் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சீன்ஸ் க்ரூஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் அமைந்துள்ள ஒட்டுமொத்த உணவகமும் குளிர்சாதன வசதி கொண்டது.
இந்த சொகுசு உணவக கப்பலின் பயணித்து உணவருந்த தனி நபர் கட்டணம், குழு கட்டணம், பார்ட்டி கட்டணம், ஐ.டி. ஊழியர்கள் குழு கட்டணம் உள்ளிட்ட கட்டண விபரங்களின் பட்டியலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவிக்கிறது. மேலும் முட்டுக்காடு படகுக் குழாமில், இந்த கப்பலுக்கென சிறப்பு இடம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விருந்தினர்கள் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் கப்பல் சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தளம், தொலைக்காட்சித் திரை, இசை நிகழ்ச்சி போன்றவற்றுடன் அமைந்துள்ளது.
அலுவலக கூட்டங்கள், சிறிய விருந்து அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை மக்கள் இங்கே நடத்திக்கொள்ளலாம். இங்கு 100 பேர் வரை இருக்கலாம். இருக்கை மற்றும் விருந்து மண்டபம் கொண்ட திறந்த மேல் தளம் உள்ளது. இரண்டாவது தளம் உணவு சாப்பிடும் இடமாகவும், பப்பே முறையில் உணவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்கும் விருந்துகளில் அதற்கேற்ப உணவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மிதக்கும் கப்பல் திருமண நிகழ்வுகள், பெருநிறுவனக் கூட்டங்கள், குடும்ப விழாக்கள், சிறிய அளவிலான துவக்க நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என உறுதியளிக்கிறது.
மீட்புப் படகுகள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கப்படும் என்றும் முட்டுக்காடு படகு குழாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.