தென்கொரியாவின் மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 7ம் தேதியிலிருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், வெள்ளம், நிலச்சரிவு போன்றவையும் ஏற்படுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உலகின் பல்வேறு இடங்களில் அதிக மழை அல்லது அதிக வெயில் என மக்களை வாட்டுகிறது இயற்கை. சவுதியில் தினமும் வெயிலினால் அதிக பேர் மரணமடைந்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அதேபோல் சில இடங்களில் அதிக மழை பெய்து வெள்ளக்காடாக உள்ளது. எப்போதும் மழைக் கொட்டித் தீர்க்கும் இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது. அதேபோல் அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து வருகிறது.
குன்சான் நகரில் ஜூலை 10ஆம் தேதி காலை, ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தென்கொரிய வானிலை மையம் தெரிவித்தது.
தென்கொரியாவின் மத்திய பகுதியில் உள்ள பல இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் ஒருவர் பலியானதாகவும் தென்கொரியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பல வீடுகள், பொதுச் சொத்துகள், சாலைகள், உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கொரியாவின் அதிவேக ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டபோதிலும் சில பகுதிகளில் அவற்றின் வேகம் குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஜூலை 10ஆம் தேதியன்று அந்நாட்டின் தேசிய ரயில் நிறுவனம் சில ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
மேலும் இதேபோல் மழை தொடர்ந்தால், இன்னும் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிய வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே விட்டுவிட்டு மழை பெய்துக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரேடியாக மழைக் கொட்டுகிறது என்பதால், தென்கொரியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.