
தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பெண்களுக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ்வசிக்கும் பெண்கள், ஈர மாவு அல்லது உலர்ந்த மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, 50 சதவீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கான மானியத் தொகையினை பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அங்குள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பெற்ற பெண்களுக்கு இயந்திரம் வாங்க அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும், இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இந்த திட்டம் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெற்றவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம். பெண்களே நேரம் கடத்தாமல் அவசர அவசரமாக விண்ணப்பிக்கவும், ஏனெனில் கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது.
மானியத்தொகை :
இந்த நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஈர மாவு அல்லது உலர்ந்த மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, ரூ. 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத் தொகையாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதிகள் :
இந்த திட்டத்தின் பயன்பெற சில குறிப்பிட்ட விதிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அவை...
* இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். அதற்கான பிறப்பிடச் சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
* பிறந்த தேதிக்கான சான்று
* வருவாய் சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ. 1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்).
* இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற விரும்பும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி :
சென்னை மாவட்ட ஆட்சியரகம்,
சிங்கார வேலனார் மாளிகை,
8-வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவகம்
நாளை தான் கடைசி நாள் (ஆகஸ்ட் 31-ம்தேதி) என்பதால் அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
மேலும் இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவுபடுத்தி கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.