அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் 100 வயதில் காலமானார்.
1924ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அமெரிக்காவில் பிறந்த ஜிம்மி கார்டர் அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி ஆவார். இவர் 1977- ஆம் ஆண்டு முதல் 1981- ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். இவர் 1946ம் ஆண்டு அமெரிக்கா கடற்படை அகடாமியில் பட்டம் பெற்றதோடு, அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் சேவையில் சேர்ந்தார். இவரின் சேவை முடிந்த பின்னர், குடும்பத்தின் வேர்க்கடலை விவசாய தொழிலை செய்து வந்தார். இப்படி விவசாயம் செய்து வந்த இவர், 1971ம் ஆண்டு ஜார்ஜியாவின் 76வது ஆளுநரானார்.
இதனையடுத்து அமெரிக்காவின் அதிபரான இவர் பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக தீவிரமாக கார்டர் பணியாற்றினார். இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும் அவர் முக்கிய பங்காற்றினார்.
இதனால் அவருக்கு 2002ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2022ம் ஆண்டு இவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரின் சுயசரிதையை A full Life: Reflection at ninety என்ற புத்தகமாக எழுதினார்.
அந்தவகையில் வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜிம்மி கார்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவ மையத்தின் அறிக்கை வெளியானது. அதில், “பிளெய்ன்ஸ் நகரில் உள்ள வீட்டில் கார்டர் காலமானார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்தனர்.”
கார்டரின் மகன் ஷிப் கார்டர் வெளியிட்ட அறிக்கையில், "எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டும் இல்லை. அமைதியை விரும்பிய அனைவருக்கும் ஒரு ஹீரோவாக விளங்கினார். மனித உரிமை ஆர்வலராகவும், சுயநலமில்லா அன்பையும் கொண்டிருந்தார்." என்று தெரிவித்துள்ளார்.
இவரின் மறைவை ஒட்டி அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த மனித நேயம் மிக்க தலைவரையும் நண்பரையும் இழந்துவிட்டேன், ஆழ்ந்த அனுதாபங்கள்." என்று தெரிவித்துள்ளார்.