நுரையீரல் சளியை தவிர்க்க சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!
நுரையீரல் சளி என்பது சளியும் அழற்சியும் ஏற்படும் ஒரு நிலை. இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, ஒவ்வாமை அல்லது சுற்றுச்சூழல் தூசு மற்றும் புகை போன்ற எரிச்சலூட்டும் பொருட்களால் ஏற்படலாம்.
அறிகுறிகள்: ஒருவகை இருமலினால் அறியலாம். மார்பு வலி ஏற்படுதல், சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், சளி வெளியேறுதல், காய்ச்சல், தலைவலி, சோர்வு போன்றவை.
சாப்பிடக்கூடாத உணவுகள்: நீர் சத்துள்ள காய்கறிகளாகிய சுரைக்காய், பூசணி வகைகள், பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்கள் தவிர்ப்பது நல்லது. மேலும், பால், தயிர், இனிப்பு இவற்றையும் கண்டிப்பாக தவிர்க்கவும். சாக்லேட், ஐஸ்க்ரீம், தயிர் வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றை சாப்பிடலாம். பாசி பயிறு, வெண்பொங்கல் ஆகியவற்றை இரவில் தவிர்க்கவும். வெறும் தரையில் படுக்கக் கூடாது. அதிகாலை, மாலையில் வெளியில் செல்லும்போது தலைப்பாகைக் கட்டிக் கொள்ளலாம்.
சளியை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்: பிரைமரி காம்ப்ளக்ஸ் இருக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு மிகவும் அவசியம். அதற்கு புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச் சோளம், முளைக்கட்டிக் காய வைத்த கொண்டைக்கடலை, பாசிபயறு, முந்திரி, பாதாம், ஏலக்காய் இவற்றை சேர்ந்து வறுத்து மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் மாவு கலந்து பனங்கற்கண்டு சேர்த்துக் காய்த்து சூடாகப் பருக கொடுக்கலாம். பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு இரவில் ஏற்படும் இருமலுக்கு நான்கு மிளகை எடுத்து தூளாக்கி ஒரு ஸ்பூன் தேனுடன் கால் கப் காய்ச்சி ஆறிய தண்ணீர் கலந்து தூங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் கிடைக்கும். பெரியவர்களுக்கு காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால் காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மேலும், மணத்தக்காளி வற்றல் வறுத்துப் போட்டு முதல் கவளத்தை சாப்பிட்டு விட்டு பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மோர் பித்தம் நீக்கி கபத்தை குறைக்க உதவும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, சித்திரத்தை, கருஞ்சீரகம், வால் மிளகு, தாளிசபத்திரி, அதிமதுரம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு அரை ஸ்பூன் பொடி எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு முக்கால் கப்பாக வற்ற வைத்து இரு வேளை குடிக்கலாம். தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம். குடிக்கவும், குளிக்கவும், வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும். நெல்லிக்காய், இஞ்சி, தேன் கலந்து சாறு குடிக்கலாம்.
சில வீட்டு வைத்திய டிப்ஸ்கள்: உடலுக்கு ஓய்வு கொடுக்கவும். தண்ணீர், சூப் மற்றும் மூலிகை தேநீர் போன்ற திரவங்களை அதிகம் குடிப்பது சளியை தளர்த்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும். சூடான நீராவியை உள்ளிழுப்பதாலும், உப்பு நீரை மூக்கில் விட்டு கொள்வதாலும் சளியை தளர்த்தவும், மூக்கில் அடைப்பை தணிக்கவும் உதவும்.
வலி நிவாரணிகளாகிய அசிட்டமினோஃபென் அல்லது ஐபூரூஃபன் போன்றவற்றை காய்ச்சலை குறைக்க எடுத்துக் கொள்ளலாம். கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவ கவனிப்பை நாடுவது முக்கியம்.
உணவு மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாக பணிபுரிய வைக்கவும், வந்த நோயை விரைவாக எதிர்ப்பு சக்தியை கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும்.