

சமீபத்தில் நடந்த புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தேர்தலில் வேறு ஒருவரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போட்ட இளைஞரைக் கண்டுபிடித்த காவல்துறை அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தது. இது போன்ற முறையற்ற ஓட்டுகள் கள்ள ஓட்டு எனப்படுகிறது.
இது போன்ற கள்ள ஓட்டுகளால் நியாயமான வெற்றிகள் தடுக்கப்படுகிறது என்பதால் தேர்தல் ஆணையம் மற்றும் அலுவலர்களுடன் பொது மக்களாகிய நாமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைவரும் வாக்களிக்கத் தயாராகி வருகிறோம். வாக்குச் சாவடியில் நமக்குத் தெரிந்த ஒருவர் வரவில்லை என்பது நன்றாகத் தெரிந்த நிலையில் அவருக்கான ஓட்டு பதிவாகி இருப்பதை அறிந்தால் என்ன செய்யலாம்? நமக்கென்ன என்று தவிர்க்காமல் மிகவும் முக்கியமான தேர்தல் குற்றச்சாட்டாக இதை அதிகாரிகள் கவனத்திற்கு உடனே எடுத்துச் செல்ல வேண்டும்.
அதற்கான எளிய வழிமுறைகள் நிறைய உள்ளது.
உடனடியாக வாக்குச் சாவடியில் பொறுப்பில் இருக்கும் தேர்தல் அலுவலர் (RO) இடம் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) இடம் தெரிவித்து எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் வாய்வழி மட்டும் அல்லாமல், எழுத்தில் புகார் கொடுப்பது நல்லது.
அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வமான சிவிஜில் (cVIGIL App )மூலம் வீடியோ (இருந்தால்) , புகைப்படம், சாட்சியாளர் பெயர்,நேரம், வாக்குச்சாவடி எண், நபர் விவரம் சேர்த்து உடனடி புகார் அளிக்கலாம். தேர்தல் உதவி எண் 1950-ல் தொடர்பு கொள்ளலாம்.
காவல்துறையையும் நாடலாம். போலி அடையாள அட்டை, மிரட்டல், கூட்டமாக கள்ள ஓட்டு போன்றவைகளைக் கண்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடி போலீஸ் நடவடிக்கை கேட்கலாம்
ஆள்மாறாட்டம் / போலி வாக்குப்பதிவு என்பது உறுதியானால் அந்த வாக்கு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளபடும் . கடுமையான தேர்தல் குற்றமான ஆள்மாறாட்டம் மற்றும் ஒருவரே பல இடங்களில் வாக்கு போடுவது போன்றவைகளுக்கு இந்தியாவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (Representation of the People Act, 1951 மற்றும் Indian Penal Code / Bharatiya Nyaya Sanhita) நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றம் நிரூபணம் ஆனால் வழக்கின் தன்மையைப் பொறுத்து சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் கிடைக்கும். சில சமயங்களில் இரண்டும் சேர்த்து விதிக்கும் வாய்ப்புடன் உடனடியாக கைது செய்யப்படவும் வாய்ப்பு உண்டு.
சரி..இப்போது உண்மையான வாக்காளர் திரும்ப ஓட்டு போடமுடியுமா? நிச்சயம் முடியும். ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குச் செல்லும் போது, ஏற்கனவே அவரது வாக்கு வேறொருவரால் செலுத்தப்பட்டிருந்தால், அவர் தேர்தல் நடத்தை விதிகளின் 49-P பிரிவின் கீழ் 'டெண்டர் ஓட்டு' அளிக்க உரிமை உண்டு. வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையான ஆவணங்களைக் காட்டி, இந்தத் தனிப்பட்ட வாக்குச் சீட்டு மூலம் தனது வாக்கைப் பதிவு செய்யலாம்.
கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு டிஜிட்டல் முறைகளையும், வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) கள்ள ஓட்டு போடுவது சாத்தியமற்றது என்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை சந்தேகமின்றி போடலாம். எனினும் இத்தனை பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மீறி நடக்கும் தேர்தல் முறைகேடுகள் குறித்து கூடுதல் தகவல்களை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளமும் உதவும்.