
இந்தியாவில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் தங்கள் மருத்துவ செலவை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் படி ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரையிலான மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா கார்டு வழங்கப்படும்.
இந்த கார்டைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையைப் பெற முடியும். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா கார்டுகளை புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தின் கீழ் பதிவு செய்து கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மற்றுமொரு கூடுதல் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இடம்பெயர்தல் திறன் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி இனி நாடு முழுவதும் இருக்கும் 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை இணைப்பதற்கான விரிவான மருத்துவமனை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வேறொரு மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் இந்தத் திட்டம் தற்போது வழிவகை செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் 1.06 இலட்சத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மூத்த குடிமக்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் 31,466 பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சேவைகளைப் பெற அனுமதிக்கிறது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சமமான அணுகல், தரமான மற்றும் தடையற்ற மருத்துவ சேவை என மூத்த குடிமக்களின் வாழ்வைக் காப்பதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டத்தின் நோக்கத்தை மத்திய அரசு முதன்முறையாக விரிவுபடுத்தியது. அதன் பின்னர் தற்போது நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் படி விரிவாக்கம் செய்துள்ளது.
மேலும் 14,194 தனியார் மருத்துவமனைகளில் பரந்த வலையமைப்பின் மூலம் மூத்த குடிமக்கள் சிகிச்சையைப் பெற முடியும். மருத்துவ சிகிச்சையின் நிலைத்தன்மை மற்றும் தரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய தேசிய சுகாதார ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்திருக்கும் மருத்துவமனைகளின் விரிவான மருத்துவமனை இணைப்பு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது” என்று இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.