

புத்தாண்டு பிறக்கப்போகிறது என்றாலே அனைவரும் சந்தோஷமாக இருப்போம். ஆனால் 2026-ல் ஜனவரி 1-ம்தேதியில் இருந்து 15 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜனவரி 1-ம்தேதி விடியும் போது நம்முடைய பாக்கெட்டில் இருந்து வங்கி கணக்கு முதல் நம்முடைய போன் யூஸ் பண்றது வரைக்கும் 15 மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளது. இதில் சிலது நமக்கு லாபமாக இருந்தாலும், சிலது கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். அந்த வகையில் வரும் ஜனவரி 1-ம்தேதி முதல் மாறப்போகும் மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
ஜனவரியில் 1-ம்தேதியில் இருந்து வரப்போகும் மாற்றங்களில் கடன் வாங்கி கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு ஜாக்பாட் இருக்கு, ஆனா வண்டி ஓட்டுபவர்களுக்கு ஒரு செக் இருக்கு, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விவசாயிகளுக்கு புது ஐடி கார்டு என்று லிஸ்ட் பெரியதாக போகிறது.
* முதலில் கடன் வாங்குபவர்களுக்கு சூப்பரான அப்டேட், இதுவரைக்கும் உங்களுடைய சிபில் ஸ்கோர்(cibil score) 15 நாட்களுக்கு ஒருமுறை தான் அட்பேட்டாகும். ஆனால் வரும் ஜனவரி மாதம் முதல் வாரம் தோறும் உங்களுடைய சிபில் ஸ்கோர் மாறும். அதாவது நீங்க உங்களுடைய கடனை சரியாக கட்டினால் உங்களுடைய சிபில் ஸ்கோர் சட்ரென்று ஏறும். உடனே அடுத்த லோன் ஈசியாக கிடைக்கும். ஆனால் அதேசமயம் வாங்கிய கடனை கட்ட ஒரு வாரம் லேட் பண்ணால் கூட சிபில் ஸ்கோர் இறங்கிடும்.
* அடுத்தது வட்டி விகிதம், SBI, PNB, HDFC போன்ற நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகள் எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு கடன் வட்டியை குறைத்துள்ளது. வீடு, கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு கோல்டன் வாய்ப்பு என்றே சொல்லலாம். கடன் வாங்கி வீடு, கார் வாங்கியவர்களின் EMI குறையும். ஆனால் ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் வங்கியில் fixed deposit போட்டு வட்டியை நம்பி இருப்பவர்களுக்கு வட்டி கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. கடன் வாங்குபவர்களுக்கு லாபம். பணத்தை சேமிப்பவர்களுக்கு கொஞ்சம் நஷ்டம். இதுதான் 2026-ன் பொருளாதார கணக்கு.
* 3-வது மிகவும் முக்கியமான எச்சரிக்கை. பான், ஆதார் இணைப்பு வரும் ஜனவரி 1-ம்தேதி முதல் கட்டாயம். நீங்க இது இரண்டையும் இணைக்கவில்லை என்றால் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து 50000 ரூபாய்க்கு மேல் பணத்தை போடவோ, எடுக்கவோ முடியாது. இணைக்காத பட்சத்தில் அரசின் சேவைகள், நலத்திட்ட உதவிகள் பெற முடியாது. கிராமத்தில் சிறிய வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் கூட பான் கார்டு இல்லாமல் எதையும் செய்ய முடியாது.
* டிஜிட்டல் பாதுகாப்பு - இந்தியாவில் டிஜிட்டல் மோசடியை தடுக்க யுபிஐ, கூகுள் பே, போன் பே, வாட்ஸ் அப், மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப்படும். ஆன்லைன் மோசடிகளை தடுக்க சிம் கார்டு வெரிபிகேஷனை கடுமையாக்கி உள்ளது மத்திய அரசு. உங்கள் பெயரில் இருக்கும் சிம்மை வேறு யாராவது யூஸ் பண்ணால் நீங்கள் தான் பொறுப்பு என்று ஏற்கனவே சொல்லப்பட்டு விட்ட நிலையில் வரும் ஜனவரி 1-ம்தேதியில் இருந்து இந்த கெடுபிடிகள் இன்னும் கடுமையாகும். இந்த கெடுபிடி கஷ்டமாக இருந்தாலும் நம்ம பாதுகாப்பிற்கு இது நல்லது தான்.
* ரேஷன் கார்டு - ஜனவரி 1-ம்தேதி முதல் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் வருகிறது. குறிப்பாக ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் -விண்ணப்ப முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இனிமேல் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வீட்டில் இருந்த விண்ணப்பிக்க முடியும்.
* ரீசார்ஜ் கட்டணங்கள் - வரும் ஜனவரி முதல் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
* சமூக மாற்றம் - உங்கள் வீட்டில் 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்குறாங்களா. இதற்காகவே மத்திய அரசு ஒரு புது திட்டத்தை பரிசீலனை செய்ய உள்ளது. ஆஸ்திரேலியா, மலேசியா பாணியில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்த வயது சரிபார்ப்பு மற்றும் பெற்றோர் அனுமதி கட்டாயம் சட்டம் வரலாம். இந்த சட்டம் வந்தால் குழந்தைகளை ஆன்லைன் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதுடன் பெற்றோர்களுக்கும் பெரிய நிம்மதி.
* வண்டி வைத்திருப்பவர்களுக்கு - டெல்லி போன்ற பெரிய நகரங்களில் காற்று மாசுவை குறைக்க பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வணிக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் டெலிவரி சர்வீஸ், லாரி போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயமும் உள்ளது. உங்க வண்டிக்கும் இது பொருந்துமா என்பதை சோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.
* அரசு ஊழியர்களுக்கு ஒரு மெகா நியூஸ்.. 8-வது ஊதிய குழு வரும் ஜனவரி 1-ம்தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அகவிலைப்படியும் உயரும். இதனால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுடைய சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* விவசாயிகளுக்கு... கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு, தனித்துவமான விவசாயி ஐடி கார்டு இருந்தால் தான் பிஎம் கிசான் பணம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காட்டு விலங்குகள் பயிரை நாசம் செய்தால் 72 மணிநேரத்திற்குள் புகார் கொடுத்தால் காப்பீடு கிடைக்கும் என்று சூப்பர் அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையம் என்றே சொல்லலாம்.
* ரெயிலில் போர்வை, தலையணை - ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.சி. அல்லாத சாதாரண படுக்கை வசதி பெட்டிகளிலும் பயணிகளுக்கு கட்டண முறையில் போர்வை, தலையணை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் முதற்கட்டமாக 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் போர்வை, தலையணை ஆகிய இரண்டும் பெற்றுக்கொள்ள ரூ.50, தலையணைக்கு மட்டும் ரூ.30, போர்வை மட்டும் பெற்றுக்கொள்ள ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* சிலிண்டர் விலை - சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். அந்த வகையில் சென்னையில் தற்போது மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.868.50க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,750.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 1-ம்தேதி சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
* ரேஷன் கார்டு பயனர்களுக்கு கட்டாய ஆதார் சரிபார்ப்பு - ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் ஆதார் மறு சரிபார்ப்பை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து e-KYC-ஐ முடிக்க வேண்டும். முடிக்காதபட்சத்தில் ஜனவரி 1-ம்தேதி முதல் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து அகற்றுவதற்காக பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் - ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற நடைமுறை ஜனவரி 12-ந்தேதி முதல் அமலாகிறது. தற்போது இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12-ந்தேதிக்கு பிறகு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
* வருமான வரி தாக்கல் செய்ய புதுசா முன்பே நிரப்பப்பட்ட படிவம் வரப்போகுது. இது வேலையை சுலபமாக்கும். ஆனால் அதேசமயம் வருமான வரித்துறை நம்மை இன்னும் உன்னிப்பாக கவனிக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த நடைமுறை ஜனவரியில் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.