
இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. இதற்கடுத்து அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ரீசார்ஜ் கட்டணத்தை 20% வரை உயர்த்தின. அப்போது பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இருப்பினும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிக்னல் மற்றும் இணைய வேகம் குறைவாக இருப்பதே வாடிக்கையாளர்களின் வருத்தம்.
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தினசரி டேட்டா கொண்ட குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.249 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த சேவையை நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அதிர்ச்சி அளித்தது. இதுவரையில் ரூ.249 செலுத்தினால் 28 நாட்களுக்கு தினசரி 1GB இணையத்துடன் அளவற்ற அழைப்புகளை வழங்கி வந்தது ஜியோ நிறுவனம். தற்போது இந்த சேவை நிறுத்தப்பட்டதால் அடுத்ததாக ரூ.299 கட்டணத்தில் செயல்படும் சேவை தான் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமாக மாறியுள்ளது. இதில் தினசரி 1.5GB இணையத்துடன் அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ நிறுவனம் உயர்த்திய சில மணி நேரங்களிலேயே ஏர்டெல் நிறுவனமும் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏரெடெல் வழங்கி வந்த ரூ.249 என்ற குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் இன்றுமுதல் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதே சேவையை கட்டண உயர்வுடன் வழங்குமா என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆகையால் இதற்கு அடுத்த இடத்தில் உள்ள ரூ.299 கட்டண சேவை தான் குறைந்தபட்ச ரீசார்ஜ் சேவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்துள்ளதை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி விடுமோ என்ற அச்சத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதால் கட்டண உயர்வு வர வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு கட்டண உயர்வின் போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை நாடி வாடிக்கையாளர்கள் சென்றனர். இந்நிலையில் இப்போதும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இதில் ரீசார்ஜ் கட்டணங்கள் மிகவும் குறைவு. பிஎஸ்என்எல் நிறுவனமும் தனியார் நிறுவனங்களைப் போல் அதிவேக இணைய சேவையை வழங்கினால், நிச்சயமாக ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.