

புத்தாண்டின் தொடக்க மாதமான ஜனவரி முடிந்து நாளை பிப்ரவரி 1-ம்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம்தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இப்போதே பட்ஜெட் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாதந்தோறும் 1-ம்தேதி வந்தாலே மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், வங்கி கணக்கு, சிலிண்டர் விலை என எந்தெந்த விஷயங்களில் மாற்றம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும். இதில் சிலது நமக்கு லாபமாக இருந்தாலும், சிலது கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். அந்த வகையில் பிப்ரவரி 1-ம்தேதி சிலிண்டர் தொடங்கி FASTag வரை பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றனர். வாங்க அதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.
மத்திய பட்ஜெட் தாக்கல் :
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
குறிப்பாக இந்த பட்ஜெட்டில் நடுத்தர நடுத்தர வர்க்கத்தினரும், வருமான வரி செலுத்துவோரும் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். மேலும் இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன் போன்ற முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிலிண்டர் விலை :
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். கியாஸ் சிலிண்டர்களை பாரத், இன்டேன், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,750.00க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி 1-ம்தேதி) ரூ.110 அதிகரித்து, ரூ.1,849.50-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 14.20 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி சென்னையில் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி 1-ம்தேதி சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் இடையே எழுந்துள்ளது.
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயர்வு :
மக்களவையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, குட்கா, புகையிலைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பான் மசாலாவுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், பைப் சிகரெட்களுக்கான வரி 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவை ரூ.50 முதல் ரூ.100 வரைக்கு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 சிகரெட்டுகளுக்கு நீளம் மற்றும் வகையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.735 வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய கலால் வரி திருத்த சட்டத்தின் கீழ் 1000 சிகரெட்களுக்கு அதன் நீளம் மற்றும் வகையை பொறுத்து ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.18 கொண்ட சிகரெட் விலை ரூ.72 வரை உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரும் 1ம் தேதி(நாளை) முதல் இந்த சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
ஃபாஸ்டாக்கில் KYV கிடையாது :
பிப்ரவரி 1-ம்தேதி முதல் புதிய கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு ஃபாஸ்டாக்கில் (FASTag) ‘Know Your Vehicle' (KYV) சரிபார்ப்பு தேவையில்லை என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் FASTag முறை கட்டாயமாக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் FASTag முறையோடு KYV முறையும் இணைக்கப்பட்டது. சுங்கச்சாவடி வசூல் முறையில் ஏற்படும் முறைக்கேட்டை தடுப்பதற்காக கொண்டு வரப்படுவதாக கூறப்பட்ட KYV முறையில் சில சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக ஆவணங்களை பதிவேற்றுவதிலும், ஓடிபி பெறுவதிலும் குளறுபடி நீடிப்பதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பிப்ரவரி 1-ம்தேதி முதல் புதிய கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு (KYV) கிடையாது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஃபாஸ்டாக் தவறான வாகனத்துடன் இணைக்கப்பட்டாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது முறையற்ற முறையில் வழங்கப்பட்டாலோ புகார்கள் எழும்போது மட்டுமே மீண்டும் சரிபார்ப்பு தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு :
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின் படி 6 மாதங்கள் முதல் 1 வரும் வரை எந்தவித பரிவர்த்தனையும் இல்லாத ‘0’ பேலன்ஸ் கணக்குகள் பிப்ரவரி 1-ம்தேதி முதல் செயலற்றதாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோல ‘0’ பேலன்ஸ் வங்கிக்கணக்கை வைத்துள்ளவர்கள் இன்றைக்குள் (பிப்ரவரி 1-ம்தேதிக்குள்) ஒரு சிறிய பரிவர்த்தனையாவது செய்தன் மூலம் உங்கள் வங்கிக்கணக்கை ஆக்டிவாக வைத்துக்கொள்ள முடியும்.
பான் கார்டு, ஆதார் கார்டு :
உங்களுடைய பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 (இன்று) ஆகும். இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகள் பிப்ரவரி 1-ம்தேதி முதல் செயல் இழக்க செய்யப்படும். செயல் இழந்த பான் கார்டை எந்த ஒரு நிதி பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது.
எஸ்பிஐ வங்கி ஆன்லைன் ஐஎம்பிஎஸ் கட்டண உயர்வு :
எஸ்பிஐ வங்கி ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் பெரிய தொகை அனுப்பும்போது ஒரு சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
ரூ.25,000 வரை செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு எப்போதும் போல எந்தக் கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.25000 முதல் ரூ.1 லட்சம் வரைக்கும் ரூ.2 + ஜிஎஸ்டியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரைக்கும் ரூ.6 + ஜிஎஸ்டியும், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்கும் ரூ.10 + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.
வங்கி விடுமுறை :
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடும். அதுபோல இந்த பிப்ரவரி மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது, 4-வது சனிக்கிழமைகள், ஞாயிற்று கிழமைகள் மட்டுமின்றி உள்ளூர் விடுமுறை நாட்களும் இதில் அடங்கும். இந்த தேதிகளில் ஆன்லைன் வங்கி சேவைகள், ஏடிஎம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.