

தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க அரசு ஆலோசனை செய்து வந்தது. இதனை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். அதோடு தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்தனர்.
இப்படியான சூழலில் தற்போது தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் தினந்தோறும் மூன்று வேளை இலவச உணவு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நகர்ப்புறம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதோடு இவர்களுக்கென தனி நலவாரியமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
இதன்படி காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான இலவச உணவு வழங்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சென்னை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அள்ளும்போது தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால், அதற்கான சிகிச்சையைப் பெற தனித் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்கள் சுய தொழில் தொடங்க விரும்பினால் அதற்கு ரூ.3.5 லட்சம் மானியமாக வழங்கப்படும். அதோடு பணியின் போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டம் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்வதால், அவர்களின் பசியைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆகையால் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இனி 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும். படிப்படியாக இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு நற்செய்தியை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மூன்று வேளையும் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்பதற்கான உணவுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.