
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நோக்கத்தில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பம்புகளுக்கு 90% மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை 40% ஆக இருந்த மானியத்தை 90% ஆக உயர்த்தி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சோயா பீன்ஸ் பயிரிடும் விவசாயிகளுக்காகவே பிரத்யேகமாக ‘பாவேந்தர் திட்டம்’ அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி சந்தை விலைக்கும், மத்திய அரசின் கொள்முதல் விலைக்கும் இடையே வேறுபாடு இருந்தால், அந்த இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து விடும் என்பதால் நஷ்டம் என்பதே ஏற்படாது.
பாவேந்தர் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், விவசாயிகளின் மின்சார பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை வழங்கினார். இதன்படி இனி சோலார் பம்புகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என்றும், அதிக குதிரை திறன் கொண்ட பம்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், “ விவசாயிகள் தான் மாநில பொருளாதரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களின் அயராத முயற்சியால் மாநில மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு மட்டும் 39 சதவீதத்தைக் கடந்துள்ளது. மாநிலத்தில் அனைத்து திட்டங்களும், முடிவுகளும் விவசாயிகளின் நலனை குறிக்கோளாகக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது.
தற்காலிக மின் இணைப்புகளில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டுமெனில், சூரிய சக்தி கொண்ட சோலார் பம்புகளுக்கு மாற வேண்டியது அவசியம். இதற்காக 40% ஆக இருந்த சோலார் பம்ப் செட் மானியம் 90% ஆக உயர்த்தப்படுகிறது.
அதோடு தற்போது சோலார் பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, அதைவிட அதிக திறன் கொண்ட பம்பு செட்டுகள் வழங்கப்படும். அதாவது 3 குதிரைத் திறன் சோலார் பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, 5 குதிரைத் திறன் பம்பு செட்டு வழங்கப்படும். அதேபோல் 5 குதிரைத் திறன் சோலார் பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, 7.5 குதிரைத் திறன் பம்பு செட்டு வழங்கப்படும்.
நதி இணைப்புத் திட்டத்தின் மூலம் 52 லட்சம் ஹெக்டேர் விவசாய நீர்ப்பாசனப் பகுதியை, 100 லட்சம் ஹெக்டேராக விரிவாக்கம் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக உத்தர பிரதேசத்துடன் கென் - பெட்வா, ராஜஸ்தானுடன் பார்வதி - காளிசிந்த் - சம்பல் மற்றும் மஹாராஷ்டிராவுடன் தப்தி மெகா ரீசார்ஜ் திட்டம் உள்பட விவசாயிகளுக்குத் தேவையான நதி இணைப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், விவசாயிகளால் கூடுதல் மின்சாரத்தை அரசுக்கு விநியோகம் செய்ய முடியும்” முதல்வர் தெரிவித்தார்.