
ரெயில் பயணம் பஸ், கார், பயணங்களை விட சௌகரியமானது, பாதுகாப்பானது, சுவாரசியமானது. அதுவும் வயதானவர்களுக்கு மிகவும் வசதியானது என்றே சொல்லலாம். அதனாலேயே பெரும்பாலான மக்கள் பஸ் பணத்தை விட ரெயிலில் பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலேயே நீண்ட தூரப்பயணத்தை ரெயில்களில் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர்.
அந்த வகையில் ரெயில்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கனவே இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்களில் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். இதற்காகவே ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வாய்ப்பை ரெயில்வே நிர்வாகம் ஐஆர்சிடிசி மூலம் வழங்குகிறது.
அதுமட்டுமின்றிசெல்போன் ஆப் மற்றும் வெப்சைட் மூலம் நமக்கு வேண்டிய ரெயிலில் வேண்டிய தேதியில் வேண்டிய டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி வெப்சைட் யாரும் தவறாகப் பயன்படுத்தாத அளவிற்கு அதிகமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது.
இப்படியாக ரெயில் டிக்கெட்டை முன்கூட்டியே பயணம் செய்வதில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாததே. பலருக்குக் குறிப்பிட்ட தேதிக்கு முன்போ, பின்போ பயணத்தை மாற்ற வேண்டியது வரும். சில நேரங்களில் தேதியை மாற்றி டிக்கெட்டை முன்பதிவு செய்திருத்தாலும் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இப்படியான நேரங்களில் ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு புதிதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
உதாரணமாக தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கும் நிலையில், அலுவலகத்தில் லீவு கிடைக்காத போது எடுத்த டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டியிருக்கும். இப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே புக்கிங் செய்த டிக்கெட்டிற்கு கேன்சலேஷன் சார்ஜ் கட்ட வேண்டும்.
பயணிகளுக்கு ஏற்படும் இந்த அசௌகர்யத்திற்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியன் ரெயில்வே தற்போது புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.
பண்டிகை காலங்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு நேர்ந்தால் இனிமேல் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பயணத்தேதியை மாற்றிக்கொண்டால் மட்டும் போதும். அந்த வகையில் இந்த புதிய நடைமுறை ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் இந்திய ரெயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எனினும் இதில் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, நீங்கள் உங்கள் பயணத்தேதியை மாற்றிக்கொள்ள முடியுமே தவிர மாற்று தேதிக்கான உங்களது பயண டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. அதேபோல் மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே உங்களது டிக்கெட்டை மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் அமலாக உள்ள இந்த புதிய நடைமுறை பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.