#BIG NEWS : மக்கள் தலையில் அடுத்த இடி! பிஸ்கட்டு முதல் சோப் வரை...எல்லாம் உயர போகுது..!

காலையில் எழுந்ததும் குடிக்கும் காபி முதல் குளிக்கும் சோப்பு வரை நுகர்வோர் பொருட்களின் விலையை உயர்த்த அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
grocery bill shock
grocery bill shockimage credit- AI Image
Updated on

இந்தியாவைப் பொறுத்தவரை, உயர்ந்த எண்ணெய் விலைகள் இறுதியில் பெட்ரோல் நிலையங்களை விட மிக அதிகமானவற்றைப் பாதிக்கின்றன. கச்சா எண்ணெய் சார்ந்த பணவீக்கமானது போக்குவரத்து, பேக்கேஜிங், இரசாயனங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளில் பிரதிபலித்து, அன்றாட வீட்டுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, மரிகோ, டாபர் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் FY26 நான்காம் காலாண்டு முடிவுகளும் விளக்கங்களும், தேவை மீண்டு வரும் நிலையிலும், FMCG துறை மிகவும் கடினமான செலவுச் சூழலுக்குத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன.

தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மற்றொரு பேரிடியாக முன்னணி FMCG நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்கான விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோப்புகள், சலவைத்தூள்கள், பிஸ்கட்டுகள், பாக்கெட் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் சார்ந்த பணவீக்கம், உயர்ந்த லாஜிஸ்டிக்ஸ் கட்டணம் மற்றும் மத்திய கிழக்கு பதட்டங்களால் ஏற்படும் எரிபொருள் செலவுகள் ஆகியவை லாப வரம்புகளைக் குறைப்பதால், முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் விலை உயர்வுகளுக்குத் தயாராகி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றங்கள்! உங்கள் பாக்கெட் முதல் பயணம் வரை...எகிறப்போகும் விலை..!
grocery bill shock

ஏற்கனவே சுமார் 3 முதல் 5 சதவீதம் வரை விலைகளை உயர்த்தியுள்ள நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள், தங்களின் சமீபத்திய வருவாய் அறிக்கைக் கூட்டங்களில், நிலையற்ற கச்சா எண்ணெய் விலைகளால் ஏற்படும் பணவீக்க அழுத்தம், உயர்ந்த போக்குவரத்துச் செலவுகள், நாணய மதிப்பிழப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் சீர்குலைவுகளை காரணம் காட்டி, தொடர்ந்து விலை உயர்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை உயர்வும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பேக்கேஜிங் செலவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களைத் தயாரிப்பதற்கான செலவும் அதிகரித்ததுடன், தயாரித்து முடித்த பொருட்களை கொண்டு செல்வதற்கான லாஜிஸ்டிக்ஸ் கட்டணமும் அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் FMCG நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளதால் வேறு வழியின்றி அந்த சுமையை நிறுவனங்களும் நுகர்வோர் மீது திணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே FMCG பொருட்களின் விலை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் இனிவரும் காலத்திலும் இதேபோன்று விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முக்கியமாக 5, 10, 20 ரூபாய் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் தான் அதிகளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக கூலி தொழிலாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் 5 ரூபாய், 10 ரூபாய் நுகர்வோர் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்களின் வருமானத்திற்கு இவைகளை மட்டுமே வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படி இருக்கையில், விலையை மாற்றினால், விற்பனையில் சரிவு ஏற்படும் என்பதால் விலையை மாற்றாமல் எடையை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

Good Day, Marie Gold, Milk Bikis மற்றும் Tiger போன்ற பிரபலமான பிராண்டுகளுக்குப் பெயர் பெற்ற Britannia நிறுவனம், 20% வரை எரிபொருள் செலவு மற்றும் பேக்கேஜிங் செலவு உயர்வைச் சமாளிக்கும் வகையில், நேரடி விலை உயர்வு மற்றும் தயாரிப்பின் எடையைக் குறைத்தல் (grammage reduction) ஆகிய இரண்டு மாற்று வழிகளையும் பரிசீலித்து வருவதாக, அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரக்ஷித் ஹர்காவே தெரிவித்துள்ளார். எரிபொருள் செலவு உயர்வு மட்டுமின்றி, பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் லேமினேட்களின் விலை உயர்வும் நிறுவனத்திற்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது. மேலும், இந்நிறுவனம் LPG மற்றும் PNG எரிவாயுக்களையே பெரிதும் சார்ந்துள்ளது; இவற்றின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கத் தாக்கம், நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளில் நேரடியாகப் பிரதிபலிக்கிறது என்றும் ஹர்காவே குறிப்பிட்டார்.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனமாகும். Surf Excel, Brooke Bond, Lifebuoy, Dove, Clinic Plus, Sunsilk மற்றும் Lakme போன்ற பிரபலமான பிராண்டுகளைக் கொண்ட, நுகர்வோர் விரைவுப் பொருட்கள் (FMCG) தயாரிப்பில் முன்னணியில் உள்ள HUL நிறுவனமும், மூலப்பொருட்களின் விலை உயர்வு அழுத்தம் தொடர்ந்து நீடித்தால், மேலும் விலை உயர்வுகளை மேற்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் மூலப்பொருட்களின் அடிப்படைச் செலவில் இதுவரை சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், எங்கள் தயாரிப்பு வகைகளைப் (portfolio) பொறுத்து, ஏற்கனவே 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலை உயர்வை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என்று HUL-இன் தலைமை நிதி அதிகாரி (CFO) Niranjan Gupta தெரிவித்தார்.

அதேபோல் ஃபெவிகால், டாக்டர் ஃபிக்சிட், ஃபெவிக்குவிக் மற்றும் எம்-சீல் போன்ற பிரபலமான பிராண்டுகளைச் சொந்தமாகக் கொண்ட பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், நிறுவனமும் தங்களுடைய பொருட்களின் விலையை உயர்த்த தயாராகி வருகிறது.

உள்நாட்டு FMCG தயாரிப்பு நிறுவனமான டாபர் இந்தியா குளோபல் தலைமைச் செயல் அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா, இந்த நிதியாண்டில் தங்கள் நிறுவனம் ஏற்கனவே 10 சதவீத பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் தாக்கத்தைத் தணிப்பதற்காக விலை உயர்வுகளைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

இந்த பொருட்களின் விலையை உயர்த்தினால் மக்கள் அந்த பொருட்களை வாங்க மாட்டார்கள் என்பதற்காகவே, சில நிறுவனங்கள் விலையை அதிகரிக்காமல் தங்கள் உற்பத்தி பொருட்களின் எடையை குறைக்க தொடங்கியுள்ளன. அதாவது சந்தையில் அந்த பொருட்களின் விலை என்னவோ 5 ரூபாயாக அப்படியே இருக்கும். ஆனால் முன்னர் வாங்கிய எடைக்கும் தற்போது வாங்கும் எடைக்கும் வித்தியாசம் இருக்கும்.

குளிர்பானங்கள் மற்றும் குடிநீரின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

காலம் நிலையற்றதாக உள்ளது என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிப்பது கடினம் என்றும் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மணீஷ் திவாரி கூறினார்.

ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நுகர்வோர் பொருட்கள் (FMCG) தயாரிக்கும் டாடா நிறுவனம் தற்போது வரையில் எந்த பொருட்களின் விலை உயர்வையும் அமல்படுத்தவில்லை. இந்நிறுவனம் டீ, காபி, உப்பு என பல்வேறு பொருட்களை தயாரிப்பதால் இன்று வரை விலை உயர்வை சமாளித்து வருவதாகக் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு பதட்டங்கள் நீண்ட காலம் நீடித்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சராசரிக்கும் குறைவான பருவமழை ஆகியவற்றைச் சேர்க்கும்போது, உங்கள் வீட்டு உபயோகக் கட்டணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் மக்கள்..! அதிர்ச்சி தரும் UNDP அறிக்கை..!!
grocery bill shock

FMCG நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்த 1000 காரணங்களை கூறினாலும் இறுதியில் பாதிக்கப்பட போவது என்னவோ சாமானிய மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் இன்னமும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் இனிமேல் சாமானிய மக்கள் தங்களது தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com