மீண்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் மக்கள்..! அதிர்ச்சி தரும் UNDP அறிக்கை..!!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக இந்தியாவில் 25 லட்சம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
UNDP report
UNDP reportAI Image
Updated on

புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் என்பதை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி (UNDP)) அறிக்கை பிரதிபலித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதாவது, போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலும் இராணுவ பதற்ற அதிகரிப்பும், இந்தியாவில் உள்ள 2.5 மில்லியன் மக்களை வறுமைக்குள் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளும் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.மேலும், நாட்டின் மனித மேம்பாட்டு முன்னேற்றத்தில் சில பின்னடைவுகளையும் நாடு சந்திக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

'மத்திய கிழக்கில் இராணுவ பதற்ற அதிகரிப்பு: ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மனித மேம்பாட்டு மீதான தாக்கங்கள்' என்ற தலைப்பிலான தனது அறிக்கையில், இந்த மோதலானது "ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் முழுவதும் மனித மேம்பாட்டு அழுத்தங்களை விரிவுபடுத்துவதாக" ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம்!தைவானை சுற்றி வளைத்த சீனப் படைகள்..!
UNDP report

‘உயர்ந்து வரும் எரிபொருள் விலை, சரக்கு போக்குவரத்து மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கம் குடும்பங்களின் வாங்கும் திறனைக் குறைத்து, உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்து, பொது நிதிநிலைமைகளை நெருக்கடிக்குள்ளாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்துகிறது' என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இந்த ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, உலகளவில் 88 லட்சம் மக்கள் வறுமையில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கு ரூ.27 லட்சத்து 84 ஆயிரத்து 886 கோடி (299 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை இழப்பை ஏற்படுத்த இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர்ப்பதற்றம் மற்றும் ராணுவ மோதல்கள் காரணமாக இந்தியாவில் 25 லட்சம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது ஏற்கனவே இந்தியாவில் வறுமைக்கு தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது 25 லட்சமாக எகிறும் நிலையில் உள்ளது.

இந்தியாவின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்தில் இருந்து 24.2 சதவீதமாக உயரக்கூடும் எனவும், போர் நெருக்கடிக்கு பின் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 35.4 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

இப்பெருக்கம், இப்பிராந்தியத்தின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும், வருமானம் மற்றும் விலை மாற்றங்களால் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இப்பிராந்தியம் அதிகளவில் ஆளாகும் தன்மையையும் பிரதிபலிக்கிறது. ஆனால் சீனாவைப் பொறுத்தவரை, வறுமைக்குள் விழும் அபாயத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் மிதமான உயர்வே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது சுமார் 115,000-லிருந்து 620,000-க்கும் மேலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில், ஒட்டுமொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இந்த உயர்வு மிகச்சிறிய விகிதாச்சார மாற்றத்தையே குறிக்கிறது.

இப்பிராந்தியத்தின் பெரிய இறக்குமதியாளர்களில், இந்தியா தனது 90 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் தேவைகளை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது என்றும், 40 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியையும், 90 சதவீத எல்.பி.ஜி இறக்குமதியையும் மேற்கு ஆசியாவிலிருந்து பெறுகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

LNG விலைகள் உயர்ந்து வருவதால், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகம் சார்ந்துள்ளன.

வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளைப் பொறுத்தவரை, கூடுதல் சரக்கு கட்டணங்கள், போர் அபாயக் காப்பீட்டு பிரீமியங்கள், வழித்தட மாற்றங்கள் மற்றும் இடைநிலை மற்றும் நுகர்வோர் பொருட்களின் விநியோகத்தில் தாமதம் ஆகியவற்றின் மூலம் 36 நாடுகளில் 25 நாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக UNDP பகுப்பாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் மதிப்பீட்டின்படி, மேற்கு ஆசிய சந்தைகள் ஏற்றுமதியில் 14 சதவீதத்தையும், இறக்குமதியில் 20.9 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இவையெல்லாம் பாதிக்கப்படும்போது, அதை சார்ந்திருக்கும் மக்களையும் இந்த பாதிப்பு ஆட்கொள்கிறது. அதாவது முறைசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

உணவுப் பாதுகாப்பில் இராணுவ மோதல் தீவிரமடைவதன் தாக்கத்தை எடுத்துக்காட்டிய அந்த அறிக்கை, "இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு, வளைகுடாப் பொருளாதார நடவடிக்கைகள் குறைவதால் குடும்ப வருமானம் மற்றும் வாங்கும் சக்தி பலவீனமடைந்து, வெளிநாட்டிலிருந்து வரும் பண இழப்புகளால் உணவுப் பாதுகாப்பு அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும்" என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
மேற்கு ஆசியப் போர்: இந்திய உற்பத்தித் துறைக்கு கடும் நெருக்கடி - எகிறும் உர விலை, முடங்கும் ஜவுளித் தொழில்..!
UNDP report

சுருக்கமாகச் சொன்னால், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் போர், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியக் குடும்பங்களின் அடுப்பாங்கரை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com