Frozen Screen Scam: மொபைல் ஸ்கிரீன் 'ப்ரீஸ்' ஆகுதா? உஷார்... உங்க மொத்த பணமும் காலி ஆகிடும்!

போன் ஸ்கிரீன் 'ப்ரீஸ்' ஆகுதா? உஷார்! மொத்த பணத்தையும் சுருட்டும் புதிய சைபர் மோசடி!
சைபர் மோசடி
சைபர் மோசடிsource:hindustan news point
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து நிதி மோசடிகள், ஹேக்கிங் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற சைபர் குற்றங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

சைபர் கொள்ளை (Cyber Theft / Cybercrime) என்பது கணினி, இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பணம், தனிநபர் விவரங்கள் அல்லது நிறுவனங்களின் தரவுகளைத் திருடும் குற்றமாகும். வளரும் தகவல்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, சைபர் குற்றங்களும் அதிகரிக்கின்றன. கணினி அல்லது எந்தவகையான தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் மோசடி நடந்தாலும் அது சைபர் குற்றமாக வரையறுக்கப்படுகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

வங்கி கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி பணம் பறிப்பது, கணினி தரவுகளை முடக்கி பணம் கேட்டு மிரட்டுவது, போலி இணைப்புகள் மூலம் நுகர்வோரின் ரகசியத் தகவல்களைத் திருடுவது, சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் மற்றும் அவதூறு பரவுவது போன்ற பல்வேறு முறைகளை கையாட்டு பைசர் கொள்ளையர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் தற்போது புதுவிதமான சைபர் கிரைம் மோசடியை சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது.

அதன்படி, சமூக வலைதளங்களில் வரும் ஏதோ ஒரு விளம்பரத்தையோ அல்லது தெரியாத ஒரு லிங்க்கையோ கிளிக் செய்தவுடன் உங்கள் செல்போன் திடீரென இயங்காமல் நின்றுவிடுகிறதா? ஸ்கிரீன் அப்படியே ‘ப்ரீஸ்’ ஆகிவிட்டதா? இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். ஏனெனில் இது உங்கள் மொபைல் போன் ஹேக் (Hack) செய்யப்பட்டதற்கான அல்லது வைரஸ்/மால்வேர் (Malware) தாக்குதலுக்கு உள்ளானதற்கான மிக முக்கிய அறிகுறியாகும்.

இப்போது சைபர் கொள்ளையர்கள் உங்களை ஏமாற்ற ‘ப்ரோசன் ஸ்க்ரீன் ஸ்கேம்’ (Frozen-Screen UPI Scam) என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். உங்கள் போன் ஹேங் ஆகும்போது ஏற்படும் பதற்றத்தைப் பயன்படுத்தி, உங்களை வங்கி அதிகாரிகளாகவோ அல்லது கஸ்டமர் கேர் ஊழியர்களாகவோ அழைத்து ஏமாற்றுவதே இவர்களின் வேலை.

ப்ரோசன் ஸ்க்ரீன் ஸ்கேமில் உங்கள் போன் அல்லது UPI செயலி திடீரென ஹேங் ஆனது போல் (Hang) செயல்படும். இது சாதாரண தொழில்நுட்பக் கோளாறு என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் பின்னணியில் ஹேக்கர்கள் உங்கள் UPI பின் (PIN) எண்களை அல்லது OTP-க்களை திருடிக் கொண்டிருப்பார்கள். போன் இயல்பு நிலைக்கு வருவதற்குள் உங்கள் கணக்கில் உள்ள பணம் முழுமையாகக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.

இந்த மோசடி வெறும் பிஷிங் முறையோடு நின்றுவிடுவதில்லை. உங்கள் போனில் உள்ள கோளாறைச் சரி செய்கிறோம் என்று கூறி, ஒரு போலியான செயலியை (APK) பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள்.

சைபர் மோசடி
சைபர் மோசடிsource:raj express

அந்தச் செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன், உங்களின் நோட்டிபிகேஷன் (Notification), மெசேஜ்கள் (Messages) மற்றும் ஆக்சசிபிலிட்டி பெர்மிஷன்களைப் (Accessibility Permission) பயன்படுத்தி கொள்ளையர்கள் உங்கள் போனைத் தங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

குறிப்பாக, உங்களின் ரகசிய ஓடிபி (OTP) எண்களை உங்களது கவனத்திற்கு வராமலேயே படித்து, உங்களின் யூபிஐ (UPI) கணக்கிலிருந்து பணத்தை அப்படியே சுருட்டி விடுவார்கள்.

இந்தத் தாக்குதலின் மிக மோசமான பகுதி என்னவென்றால், உங்களின் யூபிஐ பின் (UPI PIN) எண்ணை நீங்களே உள்ளிடும் வகையில் உங்களை அவர்கள் மூளைச்சலவை செய்வார்கள்.

அல்லது ஸ்கிரீன் ஷேரிங் ஆப் மூலம் நீங்கள் அழுத்தும் எண்களை அவர்கள் நேரலையாகக் கண்காணிப்பார்கள். இப்படித் திருடப்படும் பணம், உங்களின் அனுமதியோடு நடந்த ஒரு சாதாரணப் பரிவர்த்தனை போலவே தோன்றும். இதனால் இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது.

உடனடியாக செய்ய வேண்டிய அவசர நடவடிக்கைகள் :

ஒருவேளை உங்கள் போன் ஸ்கிரீன் இப்படி மர்மமான முறையில் முடங்கிவிட்டால், முதலில் பதற்றமடையாமல் உடனடியாக மொபைல் டேட்டா (Mobile Data) மற்றும் வைஃபை (Wi-Fi) இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். முடிந்தால் போனை ஏரோப்ளேன் மோடில் (Airplane Mode) போடவும். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனை வெளியில் இருந்து இயக்குவது தடுக்கப்படும்.

போன் முற்றிலும் இயங்காமல் (Freeze) இருந்தால், பவர் பட்டனையும் (Power Button) வால்யூம் டவுன் (Volume Down) பட்டனையும் ஒன்றாக சில நொடிகள் அழுத்திப் பிடித்து ஃபோர்ஸ் ரீஸ்டார்ட் (Force Restart) செய்ய முயலுங்கள்.

போன் ஆன் ஆனதும் அதை Safe Mode-க்கு மாற்றவும். (பெரும்பாலான போன்களில் பவர் ஆஃப் பட்டனை நீண்ட நேரம் அழுத்தினால் இந்த ஆப்ஷன் வரும்).

சேஃப் மோடில் தேவையற்ற அல்லது நீங்கள் டவுன்லோட் செய்யாத புதிய ஆப்ஸ்கள் (Apps) ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்து அதை உடனே அன்இன்ஸ்டால் (Uninstall) செய்யவும்.

உங்கள் போன் முடங்கிய சில நிமிடங்களிலேயே, மற்றொரு போன் அல்லது கணினி மூலம் உங்கள் வங்கி நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள்.

தேவைப்பட்டால் தற்காலிகமாக உங்கள் வங்கி கார்டுகளை பிளாக் (Block) செய்யவும்.

எந்த வழியிலும் போன் சரியாகவில்லை என்றால், போனில் உள்ள அனைத்து தரவுகளையும் அழிக்கும் Factory Reset செய்வதே பாதுகாப்பானது.

சமூக வலைதளங்களில் வரும் "பரிசுகள் விழுந்திருப்பதாகக் கூறும் குறுஞ்செய்திகள்", "பகுதி நேர வேலை வாய்ப்பு" (Part-time job offers) போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களையும், அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்குகளையும் எப்போதுமே கிளிக் செய்யாதீர்கள்.

முன்பின் தெரியாத நபர்கள் சொல்லும் எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். உங்களின் வங்கியிலிருந்து பேசுவதாக யாராவது அழைத்து போனை ரிமோட் ஆக்சஸ் செய்யச் சொன்னால், அதை ஒருபோதும் ஏற்காதீர்கள்.

உங்கள் வங்கி கணக்கில் ஏதேனும் முறைகேடு நடந்ததாகச் சந்தேகம் வந்தால், உடனடியாக ‘1930’ என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கவும். உங்களின் விழிப்புணர்வு மட்டுமே உங்களது கடின உழைப்பின் பலனைப் பாதுகாக்கும்!

இதையும் படியுங்கள்:
அரசு உதவித்தொகைனு மெசேஜ் வந்திருக்கா? தொட்டு கூட பார்க்காதீங்க... உங்க பேங்க் பேலன்ஸ் காலி ஆயிடும்!
சைபர் மோசடி
logo
Kalki Online
kalkionline.com