தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நாளை (மே 23) முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தற்போது அதிரடியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.
1,44,634 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில், 892 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 77 சுங்கச் சாவடிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், நாளை (மே 23) முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட வாகனங்களுக்கு ரூ.25 முதல் ரூ.100 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச் சாவடிகளில் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க FASTag மூலமாக கட்டணம் செலுத்தும் வழிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட 98 சதவீத வாகனங்கள் FASTag நடைமுறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் இளவர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 66 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒன்றரை மாதத்திற்குள் மீண்டும் ஒரு கட்டண உயர்வு என்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்திலேயே இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது விலைவாசியை மேலும் உயர்த்தும்.
கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு 55 ரூபாயாக இருந்த சுங்கக் கட்டணம் தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகு ரக வாகனங்களுக்கு 85 முதல் 130 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சுங்கக் கட்டண உயர்வால், உண்மையில் பாதிக்கப்படப் போது பொதுமக்கள் தான். ஏனெனில் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தொடர்ந்து தற்போது சுங்கக் கட்டணமும் உயர்ந்திருப்பது விலைவாசியை கடுமையாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்பட்ட வாகனங்களை விடுத்து, பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.