ஜெல் நெயில் பாலிஷ் போட்டா மலட்டுத்தன்மை வருமா? பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது ஏன்?

ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து ஐக்கிய ராஜ்ஜியத்திலும் ஜெல் நெயில் பாலிஷை விரைவாக உலர வைக்கும் TPO எனும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
gel nail polish|நெயில் பாலிஷ்
gel nail polish|நெயில் பாலிஷ்image credit-foxnews.com
Updated on

ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) தொடர்ந்து ஐக்கிய ராஜ்ஜியத்திலும் (UK) ஜெல் நெயில் பாலிஷ் மீது முழுத் தடை இல்லை எனினும் நெயில் பாலிஷை விரைவாக உலர வைக்கும் TPO எனும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் மீது மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், 2025 செப்டம்பர் 1 முதல் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருளான TPO-க்கு தடை விதித்துள்ளது. காரணம் TPO-வுக்கும் நீண்டகால கருவுறுதல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கப் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருப்பதாக பல விலங்கு ஆய்வுகள் கூறியதை தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள், கழிப்பறைப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சங்கத்தின் (CTPA) அறிவியல் இயக்குநர் 'அந்த இரசாயனத்தின் அபாயகரமான பண்புகள் மற்றும் மிக மோசமான சூழ்நிலையில் உடல் அதிக அளவில் வெளிப்படும்போது ஒரு பொருள் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிக்கப்பட்டதாக' தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் "அழகுசாதனப் பொருட்களில் TPO இவ்வாறு பயன்படுத்தப்படுவதில்லை . நகப் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த மூலப்பொருளின் அளவு, கருவுறுதலில் ஏதேனும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடிய அளவை விட ஆயிரம் மடங்குக்கும் குறைவாகும். மேலும், இந்தப் பொருட்கள் நகத்தில் பூசப்படுவதால், இந்த மூலப்பொருள் நம் உடலால் உறிஞ்சப்படுவதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது" என்று அங்கு பிரபலமான ரெயின்ஸ்ஃபோர்ட் கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து ஐக்கிய ராஜ்ஜியத்தில், இந்தத் தடை ஆகஸ்ட் 15 அன்று அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் காரணமாக, உற்பத்தியாளர்கள் இனி TPO அடங்கிய புதிய தயாரிப்புகளை விற்க முடியாது.

gel nail polish
gel nail polishimage credit-chroniclelive.co.uk

இருப்பினும், அழகு நிலையங்கள் ஏற்கனவே உள்ள TPO அடங்கிய தயாரிப்புகளைப் பயன்படுத்தி, பிப்ரவரி 14, 2027 வரை அல்லது கையிருப்பு தீரும் வரை ஜெல் மேனிக்யூர் சேவைகளைத் தொடர்ந்து வழங்கலாம்.

நக அலங்கார நிபுணர்களால் TPO அடங்கிய புதிய பொருட்களை வாங்க முடியாது. TPO அடங்கிய தயாரிப்புகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பல ஜெல் நெயில் பாலிஷ் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இரசாயனம், பொதுவாக TPO என்று அழைக்கப்படும் ட்ரைமெதில்பென்சாயில் டைஃபினைல்பாஸ்பின் ஆக்சைடு (Trimethylbenzoyl Diphenylphosphine Oxide) ஆகும். சில ஜெல் நக அலங்காரங்களில், நெயில் பாலிஷ் பளபளப்பான தோற்றத்தைப் பெறவும், சரியாக உலரவும் இது பயன்படுத்தப்படுகிறது. இது, குறிப்பாக UV மற்றும் LED ஒளியின் மூலம் பதப்படுத்தப்படும் நகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஒளித்தூண்டி (Photoinitiator) ஆகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஆடையில் பட்ட நெயில் பாலிஷ் கறையை நீக்க சில ஆலோசனைகள்!
gel nail polish|நெயில் பாலிஷ்

இது வார்னிஷை அதிக நீடித்து உழைக்கச் செய்வதுடன், அதன் நிறத்தை நீண்ட நேரம் தக்கவைக்கவும் உதவுகிறது என்பதால் இது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.

TPO சில ஜெல் பாலிஷ்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பாரம்பரியமாக காற்றில் உலர்த்தப்படும் நெயில் பாலிஷ்களில் காணப்படுவதில்லை. சந்தையில் ஏற்கனவே TPO இல்லாத ஜெல்கள் உள்ளன, மேலும் பல அழகு நிலையங்கள் இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றன. சில மாற்றுத் தயாரிப்புகள் ஒரே வேதியியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், வெவ்வேறு சேர்மங்கள் வெவ்வேறு பாதுகாப்பு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதாக அழகு நிலையங்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்தத் தடையின் பொருள், 'ஜெல் நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை அல்லது புற்றுநோய் ஏற்படும்' என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதல்ல; மாறாக, இது சாத்தியமான அபாயங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே ஆகும்.

சரி நமது நிலை என்ன? EU/UK தடையால் இந்தியாவில் ஜெல் நெயில் பாலீஷ் தானாகவே தடை செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மற்றும் இந்திய ஒப்பனை கட்டுப்பாடுகள் தான் முக்கியம் என்கின்றனர்.

பொதுவாக, ஜெல் நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படும் அனைத்து ரசாயனங்களும் ஆபத்தானவை அல்ல. அதில் உள்ள சில மூலப்பொருட்கள் தோலில் படும்போதோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும்போதோ மட்டுமே ஒவ்வாமை (allergy) மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

இதையும் படியுங்கள்:
லிப்ஸ்டிக் முதல் நெயில் பாலிஷ் வரை! இந்த மிளகாயில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
gel nail polish|நெயில் பாலிஷ்

நிபுணர்களின் இந்த விளக்கம் நெயில் பாலிஷ் பிரியர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், தரம் குறைந்த மலிவான தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com