
உலகளாவிய விதத்தில் இன்று கடைகளுக்கு சாமான்கள் வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் புகார் என்ன தெரியுமா? அது தான் ஜென் இஸட் ஸ்டேர்! (Gen Z stare)
முதலில் ஜென் இஸட் என்பது யாரைக் குறிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் ஜென் இஸட் ஸ்டேர் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஜென் இஸட் யாரைக் குறிக்கும்?
1997லிருந்து 2012 முடிய பிறந்தவர்கள் தான் ஜென் இஸட் என்று குறிப்பிடப்படுகிறார்கள்
இவர்களே இணையதளம், நவீன தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்கள் காலத்தில் பிறந்து அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்!
இவர்கள் சில சமயம் ஜூமர்ஸ் (zoomers) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.
மற்ற தலைமுறையில் பிறந்தவர்களை விட இவர்களை ஏன் ஜென் இஸட் என்று குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் மட்டுமே சமூக ஊடகங்களை அபாரமாகப் பயன்படுத்தும் வாய்ப்பை முதன் முதலில் பெற்று அவர்களைப் பயன்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் தான் என்கின்றனர் விவரம் அறிந்த ‘டிக்டாக்’காரர்கள்.
இவர்களைப் பற்றிய விவாதம் ஒன்று தான் இப்போது உலகளாவிய விதத்தில் “ஓடிக் கொண்டிருக்கிறது!” லட்சக்கணக்கான பேர்கள் இந்த விவாதத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டு வருகிறார்கள்.
2025 ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த இவர்களின் பார்வை பற்றிய விவாதம் 2025 ஜூலையில் அபாரமாக சூடு பிடித்து விட்டது.
இவர்களின் விவாதம் ஜென் இஸட் ஸ்டேர் (Gen Z stare) என்பது பற்றித் தான்.
இந்த ஜென் இஸட்காரர்கள் கடையில் வாடிக்கையாளர்கள் எதையாவது கேட்டால் ஒரு பார்வை பார்க்கிறார்களே, பார்க்கலாம், அது தான் ஜென் இஸட் ஸ்டேர்!
அவர்கள் வாடிக்கையாளர்களை நோக்கிப் பார்க்கும் இந்தப் பார்வையை வெற்றுப் பார்வை, சூனியப் பார்வை, வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கூடத் தொடர்பில்லாத பார்வை (blank, vacant and dissociative stare often used by Gen Z employees) என்று சொல்லலாம்.
இதனால் வெறுத்துப் போன வாடிக்கையாளர்கள் இவர்களை சமூகதளங்களில் 'வெளுத்து வாங்குகிறார்கள்'; அன்றாடம் ஆயிரக்கணக்கான பதிவுகள்!
உற்சாகமான விவாதத்தில் பல லட்சம் பேர் பங்கு கொள்கிறார்கள்!
இதற்கான காரணம்? அவர்கள் சமூக ஊடகங்களினாலும், போன்களினாலும் BURN OUT ஆகி உடல் ஆற்றல் போய் மனச்சோர்வு அடைந்து பார்க்கும் பார்வை தான் இது என்கின்றனர் பலரும்!
இன்னொரு சாராரோ, “பழைய கால வயதான வாடிக்கையாளர்கள் நசநச என்று தேவையற்ற கேள்விகளைக் கேட்கும் போதும், அனாவசியமாக வள வள என்று பேசும் போதும் என்ன செய்வது? வெற்றுப் பார்வை தான் அவர்களுக்கான ஜென் இஸட்காரர்களின் பதில்!” என்கின்றனர்!
இது எந்த அளவு போய்விட்டதென்றால் பிரபல பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ் மற்றும் நியூஸ்வீக் உள்ளிட்டவை இதில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விட்டன.
என்ன இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு ஜென் இஸட் பார்வை பார்க்கப் போகிறீர்களா? அல்லது மில்லென்னியல்ஸ் போல ரசிக்கப் போகிறீர்களா?
ஓ! ‘மில்லென்னியல்ஸ்' யார் என்று சொல்ல வேண்டுமோ! இவர்கள் 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள். Millennials (1981 - 1996)!