
தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் அனைவரும் வெளியில் சென்று பொழுதைக் கழிப்பது வழக்கம். அவகையில் நமக்கு சிறந்த பொழுதுபோக்காக சினிமா, கடற்கரை மற்றும் பூங்காக்கள் இருக்கின்றன. அதிலும் சவாரிகள் நிறைந்த பொழுதுபோக்கு பூங்காக்கள் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமான வொண்டர்லா, தற்போது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புதிய பொழுதுபோக்கு பூங்காவை நிறுவ உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைய உள்ள இந்தப் பொழுதுபோக்கு பூங்கா நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொழுதுபோக்கு பூங்காவைத் தேடி பொதுமக்கள் படையெடுப்பது வழக்கம். தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தை பொழுதுபோக்கு பூங்காவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைத்துள்ளது வொண்டர்லா நிறுவனம். தமிழ்நாட்டிலும் வொண்டர்லாவின் பொழுதுபோக்கு பூங்கா அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வொண்டர்லாவின் பொழுதுபோக்கு பூங்கா சென்னையில் திறக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அருகே உள்ள இள்ளளூர் எனுமிடத்தில் கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.510 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பூங்காவின் பணிகள் 70% வரை நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பரில் பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது.
டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவதால், இங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் விடுமுறையும் வருவதால் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழக மக்கள் பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அமையுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் கிட்டத்தட்ட 52 சவாரிகள் இடம் பெற உள்ளன. இதில் 16 நீர் சவாரிகளும், குழந்தைகளுக்கான 10 சவாரிகளும் இடம்பெற உள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ரோலர் கோஸ்டரும் இங்கு அமைய உள்ளது.
நியூயார்க் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இருப்பதைப் போன்ற Bolliger & Mabillard ரோலர் கோஸ்டர் சுமார் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா திறக்கப்பட்டதும், இது தான் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்ட்டராக இருக்கும்.
இது தவிர ரோலர் போஸ்டர், மிஷன் இன்டர்செல்லர், வை-ஸ்கீம், பைரேட் ஷிப் மற்றும் வொண்டர்லா பம்ப் உள்ளிட்ட சவாரிகளும் இங்கு இடம் பெற உள்ளன.