
உலகம் முழுக்க இணைய வசதி 2G நெட்வொர்க்கில் தொடங்கி 5G வரை பயன்பாட்டிற்கு வந்து விட்டது. மேலும் 6G நெட்வொர்க்கும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தொழில்நுட்பத் துறைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் பயன்பாட்டில் இருந்த போது இணைய சேவையின் கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. அதன் பின் 4G நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியதும் விலை தாறுமாறாக ஏறியது. மேலும் தற்போது 5G நெட்வொர்க் மெல்ல மெல்ல பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டதால், இணைய சேவையின் விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலகில் இணைய சேவைக்கு அதிக கட்டணம் வாங்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் ஒரு MBPS பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக ரூ.382.75 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இணைய சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் ரூ.229.12 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு MBPS பயன்பாட்டிற்கு ரூ.183.83 கட்டணத்துடன் ஸ்விட்சர்லாந்து 3வது இடத்தில் உள்ளது.
இணைய சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் கென்யா 4வது இடத்திலும், மொராகோ 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6வது இடத்திலும், ஜெர்மனி 7வது இடத்திலும், நைஜீரியா 8வது இடத்திலும், கனடா 9வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தானில் ஒரு MBPS இணைய சேவைக்கு ரூ.47.07 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 40 ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவான இணைய சேவை கட்டணத்தை வசூலிக்கும் இந்தியா இந்த பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு MBPS இணைய சேவை பயன்பாட்டிற்கு ரூ.7.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனமும், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளன. இந்நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை அழைப்புகள் மற்றும் இணைய சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இருப்பினும் அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 41 வது இடத்தில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் இனிய சேவைக்கான கட்டணங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.