

இன்றைய காலகட்டத்தில் LPG சமையல் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். நகர்புறங்களில் மட்டுமில்லாது கிராமப்புறங்களிலும் தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அந்த வகையில் சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கேஸ் சிலிண்டர். மேலும், உஜ்வாலா யோஜனா போன்ற அரசு திட்டங்கள் மூலம் சிறப்பு மானியங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சாதாரண மக்களுக்கு மானியம் இல்லாத ஒரு சிலிண்டரின் விலை ₹868.50 ரூபாய்க்கு கிடைக்கும் அதேவேளையில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 550 ரூபாய்க்கு கிடைக்கிறது.
மக்கள் என்னதான் பாதுகாப்பாக பயன்படுத்தினாலும் பல நேரங்களில் கேஸ் சிலிண்டர் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விபத்தினால் ஏற்படும் இழப்பை வாடிக்கையாளர்கள் காப்பீடு மூலம் ஈடுகட்ட முடியும் என்ற உண்மை இதுவரை நிறைய பேருக்கும் தெரியாமலேயே உள்ளது.
கேஸ் விபத்து ஏற்பட்டால் ஒவ்வொரு LPG, Indian Oil, HP Gas, Bharat Gas வாடிக்கையாளருக்கும் கிட்டதட்ட ரூ.50 லட்சம் வரை இலவச காப்பீட்டு தொகை தானாகவே கிடைக்கும். அதாவது, எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு போன்ற விபத்துகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. அதேசமயம் இந்த விபத்தில் சொத்து சேதம், மருத்துவ சிகிச்சை மற்றும் இறப்பு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீடை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு LPG சிலிண்டர் இணைப்பை வாங்கும்போது அல்லது அதனை புதுப்பிக்கும்போது, தானாகவே காப்பீடு கிடைக்கும். சரி, இதற்கு என்ன விதிமுறைகள், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
விதிமுறைகள்
வாடிக்கையாளர்கள் சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே விபத்து நடக்கும் போது ஏற்படும் இழப்பீட்டிற்கு ரூ.50 லட்சம் வரை இலவச காப்பீட்டை பெற முடியும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் கேஸ் அடுப்பு, சிலிண்டர், ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவை ISI முத்திரை உடையதாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ISI முத்திரை இல்லாதவைகளை பயன்படுத்தி அதனால் விபத்து ஏற்பட்டால் காப்பீடு பெற முடியாது.
மேலும் உங்கள் சமையல் கேஸ் வைக்கும் இடத்தின் அருகில் சேதமடைந்த மின் கம்பிகள் இருக்கக்கூடாது. இந்தக் காப்பீட்டு தொகையை பெற நீங்கள் விபத்து நடந்த 30 நாட்களுக்குள் உங்களுடைய ஏஜென்சி மற்றும் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து புகார் அளிக்க வேண்டியது அவசியம்.
தேவையான ஆவணங்கள்
FIR நகல்
மருத்துவ ரசீது,
மருத்துவமனை பில்,
பிரேத பரிசோதனை அறிக்கை
இறப்புச் சான்றிதழ்
இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் காப்பீடு கோரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி காப்பீடு பெறுவது?
* விபத்து ஏற்பட்ட நேரத்தில், LPG கேஸ் டீலரை அழைத்து அவருக்கு தெரிவிக்க வேண்டும்.
* காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்.
* Mylpg.in என்ற இணையதளம் மூலமும் விபத்து குறித்து காப்பீடு கோரலாம். இணையதளம் மூலம் காப்பீடு கோரும் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் இணைக்க வேண்டியது கட்டாயம்.
* கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்ட வீட்டில் விபத்து ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு தொகையை கோரமுடியும்.
உங்களது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விபத்தில் நடந்த இடத்தை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பார்கள். உங்களது ஆவணங்கள் அனைத்து சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களது வங்கி கணக்கிற்கு காப்பீடு தொகை அனுப்பப்படும்.