chandrababu naidu, tirupati laddu
chandrababu naidu tirupati laddu

திருப்பதி லட்டு குறித்து மீண்டும் புயலை கிளப்பிய சந்திரபாபு நாயுடு..!

குளியலறை சுத்தம் செய்யும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் திருப்பதி லட்டு செய்யப்பட்டதாக ஜெகன் மோகன் அரசை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடினார்.
Published on

திருப்பதி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு. அந்த வகையில் திருப்பதி லட்டு ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் உலகப்புகழ் பெற்ற பிரசாதமாகும். 1715 முதல் தயாரிக்கப்படும் இந்த லட்டு, புளிப்பு-இனிப்பு சுவை, உயர்தர நெய் மற்றும் முந்திரி, ஏலக்காய் போட்டு மடப்பள்ளி என்ற பிரத்யேக சமையலறையில் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது 2009-ல் புவிசார் குறியீடு (GI tag) பெற்ற திருப்பதி லட்டு, தினசரி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை திருப்பதி கோவில் உள்ளிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் கலப்பட நெய் பயன்படுத்தி லட்டு, பிரசாதம் தயாரிக்கப்பட்டதாகவும், லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருந்ததாகவும் 2024-ல் ஆட்சிக்கு வந்ததும் மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு விவகாரம்: யார் இந்த வெங்கட் ராவ்? சிபிஐ விசாரணையைத் தொடர அனுமதி..!
chandrababu naidu, tirupati laddu

இந்த கலப்பட நெய் மூலம் ரூ.234 கோடி மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, மொத்தம் 36 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நடந்த இந்த மாபெரும் குற்றத்தை கண்டுபிடிக்க முதலில் ஆந்திரஅரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் என்பதால், சிபிஐ விசாரணை தேவை என ஓய்எஸ்ஆர் காங்கிரஸார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சிபிஐ அறிக்கையில், தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மிருக கொழுப்புகள் கலந்ததாக கண்டறியப்படவில்லை எனவும் மாறாக, பாமாயில் மற்றும் பாமாயிலில் நெய் மணம் வருவதற்காக சில வேதிப் பொருட்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கலுபோட்லா கிராமத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மிருக கொழுப்புகளை பயன்படுத்தி நெய் போன்ற திரவத்தை தயார் செய்ய குறைந்த தொகை செலவாகும். நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை கோவிலில் கலப்படம் செய்யப்பட்ட பிரசாதத்தைப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம், முந்தைய அரசு திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் புனிதம் மற்றும் பெருமையைச் சீர்குலைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியின் போது, ​​அத்தகைய கலப்பட நெய் திருப்பதி லட்டுகளுக்கு மட்டுமல்லாமல், புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலுக்கும் வழங்கப்பட்டதாக’ அவர் கூறினார்.

மேலும் கலப்படம் செய்யப்பட்ட பிரசாதம் பயன்படுத்தப்பட்டதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் களங்கப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு பற்றி வெளிவராத ரகசியங்கள்: 2025ல் படைக்கப்பட்ட பிரம்மாண்ட சாதனை!
chandrababu naidu, tirupati laddu

முன்னதாக வியாழக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாயுடு, திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை என்றும் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க ஒரு நபர் குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com