
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் 'ஜிப்லி கார்டூன்' டிரெண்டாக மாறிவரும் நிலையில் இன்றைய சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். சமூக வலைதளங்களை திறந்தாலே 'ஜிப்லி கார்டூன்' புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஜிப்லி புகைப்படங்கள் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளதால், அதிக அளவில் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஜிப்லி தரும் கியூட்டான தோற்றம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சாதாரண மக்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இணையதளத்தில் பேசுபொருளாக மாறி இருக்கும் ஜிப்லி கார்டூன்களை உருவாக்கியவர் ஜப்பானை சேர்ந்த ஹாயாவோ மியாசாகி. ஹயாவோ மியாசாகி ஜப்பானின் அனிமேஷன் துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
அனிமேஷன் திரைப்பட இயக்குநரான இவர், தன் நண்பரான ஐசாவோ தகாடா என்பவருடன் சேர்ந்து 1985-ல் ‘ஜிப்லி ஸ்டூடியோ’ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார். கடந்த சில வருடங்களாக இந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஒரு தனி மவுசு நிலவுகிறது.
அனிமேஷன் என்பது உயிரற்ற ஓவியங்களை நகர்த்துவது போல் காட்டும் கலையாகும். கார்டூன்களை கைகளால் வரைந்து அதற்கு உயிர் கொடுக்கும் வண்ணமாக அனிமேஷன் படங்களை எடுக்க தொடங்கினார் ஹாயாவோ மியாசாகி. அவர் உருவாக்கிய பல அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் சில ஆஸ்கார் விருதுகளையும் தட்டி சென்றுள்ளன.
ஹாயாவோ மியாசாகியின் கைவண்ணத்தில் உயிர் பெற்ற இந்த கலை, கிட்டதட்ட சுமார் 40 ஆண்டு காலமாக இருந்து வரும் நிலையில் தற்போது ஏன் பிரபலமானது என்று நீங்கள் யோசிக்கலாம். இப்படி திடீரென மக்களிடையே ‘ஜிப்லி’ தீயாய் பரவ காரணம் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற இணையதள செயலிதான்.
சாட் ஜிபிடி சாட்பாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்ட ஒரு அப்டேட் (gpt-4o) மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை அனிமேஷன் பாணியில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் வலைத்தளவாசிகள் தங்களின் ஜிப்லி போட்டோக்களை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பதிவு செய்து மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அதிகப்படியான மக்கள் ஜிப்லி கலை வடிவத்திற்கு தங்களை மாற்ற ஆர்வம் காட்டியதால் சாட் ஜிபிடி செயலியே பல மணிநேரம் செயலிழந்துவிட்டது. அதன் பின்னர் குறிப்பிட்ட சில வரைமுறைகளை ஓபன் ஏ.ஐ. நிறுவனம் விதித்தது. இந்த வகையில் சாட் ஜிபிடி-யானது, அதன் இலவச பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிப்லி படங்களை உருவாக்கவே அனுமதியளிக்கிறது.
இதற்கிடையே இந்த கலையை கைகளால் வரைந்து உருவாக்கிய ஹாயாவோ மியாசாகி, கலைஞர்களின் உழைப்பை கேள்வி குறியாக்கும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார். அதற்கு சிலர் ஆதரவும், இது ஆபத்தானது என்று சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தேசப்பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி டிரண்டோடு இணைவதன் பின்னணியில் ஆபத்தும் இருக்கிறது என்று ஜிப்லி புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது காவல்துறை. அத்துடன் அதிகளவில் டிரெண்டிங்கில் இருக்கும் ஜிப்லியில் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக சைபர் குற்றத்தடுப்பு வல்லுநர்களும் கூறுகின்றனர்.
புகைப்படங்களை அனிமேஷனாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் ஆபத்து என்று காவல் துறை எச்சரித்துள்ளது. ஜிப்லியாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்களின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் ஏஐ உங்கள் முகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபார்த்து, நம்பகமான ஏஐ தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாக போலியான, அங்கீகரிக்கப்படாத சில செயலிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் புகைப்படங்களை கவனமாக கையாள வேண்டும் என்று காவல்முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்ன தான் புதுமையான படைப்புகள் நம்மை நகலெடுக்க ஊடுருவினாலும், அவை எல்லாவற்றையும் விட நம்முடைய சுய வடிவமும், அடையாளங்களுமே எப்பொழுதும் நிலையானது. மற்ற எல்லா உருவாக்கங்களையும் விட, அலங்கரித்த புகைப்படங்களை விட நம்மை அப்படியே காட்டுவதே சிறந்த அழகு என்பதை எப்பொழுதும் உணர்வோம். நம்மை நாமே எல்லா நேரங்களிலும் நேசிப்போம்.
எந்த ஒரு பயன்பாடும் எந்தளவு டிரெண்டிங் ஆகிறதோ அதே அளவு ஆபத்தும் நிறைந்துள்ளது என்பதை மக்கள் மறக்கக்கூடாது. எந்த செயலியை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும்.