நீங்கள் சுவாசிப்பது தூய்மையான காற்றுதானா? IQAir வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!

உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரம் குறித்த பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
South Indian States
air pollution
Published on

இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு தீவிரமான கவலையாக உள்ளது, மேலும் இது குறிப்பிடத்தக்க சுகாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரம் இந்தியாவில் உள்ளது என்று ஐ.க்யூ ஏர் நிறுவனம் (IQAir) தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகளவில் வெறும் 14 சதவீத நகரங்களில் மட்டுமே மக்கள் சுவாசிப்பதற்குப் பாதுகாப்பான காற்று உள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் 17 சதவீதத்திலிருந்து மேலும் குறைந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

IQ Air என்பது ஒரு சுவிஸ் நிறுவனமாகும். இது 143 நாடுகளில் உள்ள சுமார் 10,000 நகரங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட தரவுப் புள்ளிகளில் இருந்து உலகளாவிய காற்று மாசுபாட்டைக் கண்காணித்து, காற்றுத் தரம் குறித்த வருடாந்திர தரவரிசைகளை வெளியிடுகிறது.

அந்த வகையில் தனது 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றமே உலகளவில் காற்றின் தரம் மோசமடைவதற்கு முக்கியக் காரணம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் காற்று மாசு - புவியியல் அமைப்புதான் காரணமா? பிரச்னைக்கு தீர்வு என்ன?
South Indian States

அதாவது, தொழிற்சாலை புகை, வாகன உமிழ்வு, புதைபடிவ எரிபொருட்களை எரித்தல், விவசாயக் கழிவுகள் மற்றும் காட்டுத்தீ போன்ற காரணங்களால் வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் மற்றும் துகள்கள் கலப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இது மனித ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக, 2025-ம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீப் புகை, தூசிப் புயல்கள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் தீவிரமடைந்த கடுமையான வானிலை மாற்றங்கள் ஆகியவை காற்றின் தரத்தை மிக மோசமாக்கியுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) PM2.5-க்கு ஆண்டு சராசரி வரம்பாக 5 µg/m³-ஐப் பரிந்துரைக்கிறது, அதேசமயம் இந்தியாவின் தேசிய சுற்றுப்புறக் காற்றுத் தரநிலைகள் (NAAQS) இந்த வரம்பை 40 µg/m³ ஆக நிர்ணயித்துள்ளன. PM2.5 என்பது மனித முடியை விட சுமார் 30 மடங்கு மெல்லியதும், உள்ளிழுக்கக்கூடிய நுண்ணிய துகள்களையும் குறிக்கிறது. இவை நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவி, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள நியூவூட்வில் நகரம், 1.0 µg/m³ என்ற சராசரி ஆண்டு PM2.5 செறிவுடன் உலகின் மிகத் தூய்மையான நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஐரோப்பாவைப் பொறுத்தவரை, அன்டோரா, எஸ்டோனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே 2025-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் PM2.5 வழிகாட்டுதலுக்குள் வருகின்றன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் பாதுகாப்பான காற்றுத் தர வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலக நகரங்களில் 14% மட்டுமே உலக சுகாதார அமைப்பின் ஆண்டு சராசரியை எட்டியுள்ளன, இது கடந்த ஆண்டு 17% ஆக இருந்ததை விடக் குறைவு.

காட்டுத்தீப் புகை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை மாசுபாட்டின் அளவைத் தொடர்ந்து மோசமாக்குவதால், காற்றின் தரம் குறித்த உலகளாவிய முன்னேற்றம் தடைபட்டு வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 54 நாடுகளில் அவற்றின் ஆண்டு சராசரி PM2.5 அளவுகள் அதிகரித்துள்ளன, 75 நாடுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது, இரண்டில் மாற்றமின்றி உள்ளது, மேலும் 12 நாடுகள் இந்த ஆண்டு தரவுத்தொகுப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த ஆய்வறிக்கையில் உலகின் மிகவும் மாசுபட்ட 25 நகரங்களும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் அமைந்துள்ளன. இதில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களை இந்திய நகரங்களே பிடித்துள்ளன. இதில் முதலிடமும் இந்தியாவிற்கே கிடைத்துள்ளது என்பது தான்.

இந்த அறிக்கை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள லோனி (Loni) நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாகக் குறிப்பிடுகிறது. அங்கு PM2.5 செறிவு 112.5 µg/m³ ஆக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 23% அதிகரிப்பைக் குறிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் மேகாலயாவின் பர்னிஹாட் (Byrnihat) மற்றும் டெல்லி உள்ளன. டெல்லி கடந்த நான்கு ஆண்டுகளாக உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
டெல்லியை உலுக்கிய காற்று மாசு...! 2,00,000 பேர் சுவாசக்கோளாறால் அவதி..!!
South Indian States

2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், போக்குவரத்து, தொழிற்சாலைக் கழிவுகள், சாலைப் புழுதி மற்றும் சட்டவிரோதக் குப்பைக் கிடங்குகள் ஆகியவை லோனியின் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com