3°C வெப்பநிலை உயர்வால் 80% முதியவர்கள் பாதிக்கும் அபாயம் - தி லான்செட் அதிர்ச்சி அறிக்கை!

3°C வெப்பநிலை உயர்வால் 80% முதியவர்கள் பாதிக்கும் அபாயம்; டெல்லி, இந்தோ-கங்கை சமவெளியில் ஆபத்தின் தீவிரம் அதிகம்!
புவி வெப்பமயமாதல் முதியவர்கள் ஆபத்து
புவி வெப்பமயமாதல் முதியவர்கள் ஆபத்துsource:AI image
Updated on

புவி வெப்பமயமாதல் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், இந்தியாவின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண்டுக்குக் குறைந்தது 180 மணிநேரம் தாங்க முடியாத மற்றும் அபாயகரமான வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று The Lancet Planetary Health இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வின் முக்கிய விவரங்கள்:

இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள முதியவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு ஏற்படும் பொழுது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதியினரும், முதியவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோரும் ஆண்டுக்கு சராசரியாக குறைந்த பட்சம் 180 மணி நேரம் கடுமையான வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்வார்கள்.

முதியவர்களின் உடல் வெப்பத்தைத் தாங்கும் திறன் இளையவர்களை விடக் குறைவு என்பதை இந்த ஆய்வு கணக்கில் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள்.

டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் உள்ள முதியவர்கள் ஆண்டுக்கு 2,000 மணி நேரத்திற்கும் அதிகமான தீவிர வெப்பத்தை அதாவது ஆபத்தான சூழலை சந்திக்கக் நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான வெப்ப அலைகள் மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் அதிக அளவில் இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. முதியவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இரவும் பகலும் தொடர்ச்சியாக இந்த ஆபத்தான வெப்பநிலையை சந்திக்க (அனுபவிக்க) நேரிடும் என்று கூறப்படுகிறது.

Exceeding human heat tolerance in a warming, ageing world: a global projection modelling study
Exceeding human heat tolerance in a warming, ageing world: a global projection modelling studySOURCE:AI IMAGE

இதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆரோக்கியமான இளைஞர்களின் உடலமைப்பை கணக்கில் கொண்டு வெப்ப எச்சரிக்கைகளை உருவாக்கின. ஆனால் இந்த ஆய்வு முதியோர்களின் உடலியல் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன.

வயதாகும் பொழுது உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் திறன் குறைகிறது. மேலும் ஆரோக்கியமான இளைஞர்களைக் காட்டிலும் வயதானவர்கள் மிகக் குறைந்த வெப்பநிலை-ஈரப்பதம் உள்ள நிலைகளிலேயே அதிக உடலியல் சிரமத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் வெப்பத்தால் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லாமல் போகிறது. அதிக வெப்பமும் ஈரப்பதமும் சேர்வதால் வெப்ப மயக்கம் மற்றும் கடுமையான நீர் இழப்பு ஏற்படுத்தும். இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் தீவிரம் அடையும். வயதாவதுடன் முதியவர்களின் உடலில் வியர்வை சுரக்கும் திறன் குறைகிறது. இதனால் உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்பு பாதிக்கப்படுகிறது.

தோலின் வழியே வெப்பத்தை வெளியேற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு முதியவர்களுக்கு தாமதமாக நடக்கிறது. அதிக வெப்பத்தின் போது முதியவர்களின் இதயம் வழக்கத்தை விடக் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

கடுமையான நீர்ச்சத்து குறைபாடு, வெப்ப மயக்கம், இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்களின் தீவிரம் அதிகரிப்பது, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பாதிப்பு இரட்டிப்பாவது போன்ற சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கான அவசரத் தேவைகளாக வயது மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ப பிரத்தியேக வெப்ப செயலாக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். முதியவர்கள் எளிதில் குளிரூட்டப்பட்ட வசதிகளைப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

முதியவர்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

  • நண்பகல் வெயிலை தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் வெளியில் செல்ல வேண்டும்.

  • தனியாக வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் கண்காணிக்க வேண்டும்.

  • தாகம் இல்லாவிட்டாலும் போதுமான தண்ணீர் குடித்து, நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • வீட்டை குளிர்ச்சியாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டும்; வெப்பம் அதிகமாகும்போது ஈரத்துணி, விசிறி உள்ளிட்டவற்றால் உடலை குளிர்விக்கலாம்.

  • தலைச்சுற்றல், மயக்கம், அதிக சோர்வு, வாந்தி, குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த இடத்துக்கு சென்று மருத்துவ உதவி பெற வேண்டும்.

Reference : https://www.thelancet.com/journals/lanplh/article/PIIS2542-5196(26)00067-7/fulltext
இதையும் படியுங்கள்:
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உப்பு உங்களை என்ன செய்கிறது தெரியுமா?
புவி வெப்பமயமாதல் முதியவர்கள் ஆபத்து
logo
Kalki Online
kalkionline.com