

ஜிமெயில் பயனர்களுக்கு ஒரே மகிழ்ச்சியான செய்தி , இனி உங்களது மின்னஞ்சல் முகவரியை எளிதில் மாற்றிக் கொள்ளலாம் ,முன்பு இந்த வசதி கிடையாது. நீண்ட காலமாகவே கூகுள் பயனர்கள் இந்த ஒரு வசதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சேவை பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் பயனர்கள் தங்கள் தற்போதைய @gmail.com முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
மாற்றத்திற்கான காரணம் என்ன?
தற்போது ஜிமெயில் முகவரி தான் ஒருவரின் டிஜிட்டல் முகவரியாக செயல்படுகிறது. உங்களின் ஈமெயில் முகவரியை வைத்துத் தான் ஒவ்வொரு ஆன்லைன் தளத்திலும் நீங்கள் நுழைய முடியும். அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு தளங்கள் , தனியார் வேலைவாய்ப்பு தளங்கள் , வங்கிக் கணக்குகள் , அலுவலக கணக்குகள் , பிற ஆன்லைன் சேவைகள் என அனைத்திற்குமே ஈமெயில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதனால் , உங்களது ஈமெயில் பெயர் மதிப்பு மிக்கதாகவும் , உங்களது மேன்மையை காட்டுவதாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாவிட்டால் கூட , உங்கள் பெயர் மட்டும், ஐடி முகவரிக்காக சில எழுத்துக்கள் அல்லது சில எண்கள் மட்டும் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
நாம் சிறுவர்களாக இருந்தபோது, பயனர் பெயர்களை சரிவர தேர்வு செய்யாமல், விளையாட்டாக ஏதோ ஒரு பெயரில் ஐடிகளை உருவாக்கி இருப்போம். தற்போது அந்த பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் , ஐடியின் பெயரை மாற்றுவது முடியாத காரியமாக இருந்தது. புதிதாக வேறு ஒரு மெயில் ஐடி திறக்கும் வாய்ப்பு இருந்தாலும் , நமது பழைய ஐடியில் உள்ள டேட்டாக்கள் அழிந்து விடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்த சிக்கலுக்குத் தீர்வாகவே கூகுள் இந்த புதிய அம்சத்தைக் கொண்டு வருகிறது.
சேமிக்கப்பட்ட தரவுகள் அழியுமா?
கூகுள் முகவரியில் தான் நமது போட்டோக்கள், தொடர்புகள் , யூ ட்யூப் வீடியோக்கள் உள்ளிட்ட பல தகவல்களை சேமித்து வைத்திருப்போம் . புதிய மாற்றத்தின் சிறப்பம்சமே, உங்கள் பழைய கணக்கில் உள்ள எந்தத் தரவும் அழியாது என்பதுதான். அதனால் , நீங்கள் எந்த கவலையும் இன்றி புதிய முகவரிக்கு உங்களது பழைய ஐடியை மாற்றிக் கொள்ளலாம், மேலும் உங்களது கூகுள் டிரைவில் உள்ள பைல்கள், மற்றும் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருக்கும். நீங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றினாலும், பழைய கணக்கில் இருந்த அனைத்து வசதிகளும் புதிய முகவரிக்குத் தடையின்றி மாற்றப்படும்.
செயல்பாடு எப்படி இருக்கும்?
முகவரி மாற்றம் செய்யும் விஷயத்தில் அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருக்க செய்யும். பழைய முகவரிக்கு ஒருவர் மெயில் அனுப்பினால் அது என்ன ஆகும்? அது வந்து சேருமா ? அல்லது பெயில் ஆகுமா என்ற கவலை இருக்கும். ஆனால் , இது இரட்டை முறையில் செயல்படும். உங்களது பழைய ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினாலும் அது உங்கள் புதிய முகவரிக்கு மாற்றப்படும். அதனால் , உங்களுக்கு வரவேண்டிய மின்னஞ்சல் கட்டாயம் உங்கள் இன்பாக்சிற்கு வந்து சேரும்.
உள்நுழைவு எப்படி செய்வது?
உங்கள் விருப்பப்படி பழைய மற்றும் புதிய இரண்டு முகவரிகளையும் பயன்படுத்தி நீங்கள் கூகுளில் நுழைய முடியும்.இந்த புதிய மாற்றத்தின் படி ஒரு பயனர் தனது வாழ்நாளில் மொத்தம் மூன்று முறை மட்டுமே மின்னஞ்சல் முகவரியை மாற்ற அனுமதி அளிக்கப்படும். தற்போது இந்த மாற்றம் கூகுளின் இந்தி உதவி பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் மற்ற நாட்டுப் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.