

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான ஓலைச் சுவடிகள் மற்றும் காகித சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள், பல துறைகளைப் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர்.
இலக்கியம், ஆன்மீகம், தத்துவம், மருத்துவம், அறிவியல், சடங்குகள், வழிபாடுகள், கணிதம், ஜோதிடம் மற்றும் கலைகள் உள்ளிட்ட பல துறைகளைப் பற்றிய அரிய தகவல்கள் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளன. இது தவிர சுதந்திரத்திற்கு முன் தேசத் தலைவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் கடிதங்களும் மத்திய அரசிடம் உள்ளன.
இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கும் விதமாக, ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. இதற்காகவே ‘ஞான பாரதம்’ என்ற திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதிநவீன ஸ்கேனர்களின் மூலம் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி, மத்திய அரசின் சர்வரில் பாதுகாக்கவே ஞான பாரதத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் ஓலைச்சுவடிகளை எளிதில் அணுகும்படியாக பரவலாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இத்திட்டத்தை எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்த, அதிக திறன் கொண்ட முப்பரிமாண கேமராக்களை மத்திய அரசு வாங்கியுள்ளது.
ஓலைச்சுவடிகளை தெளிவாக படிக்கவும், எடுத்துரைக்கவும் துறை சார்ந்த மொழிப்பெயர்ப்பாளர்களும், வல்லுனர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிகளின் போது பல்வேறு ஆவணங்களை கையாள்வது எப்படி என்று இன்றைய இளம் தலைமுறையினருக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
ஓலைச்சுவடிகள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, அவற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்கு வல்லுனர் குழு ஒனறு அமைக்கப்பட்டுள்ளது. வல்லுனர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே ஸ்கேன் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஞான பாரதத் திட்டத்தின் கீழ், ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு 20 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது தவிர மேலும் 10 நிறுவனங்களை இத்திட்டத்தில் இணைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக சென்னையில் இருக்கும் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், ஸ்ரீநகரில் இருக்கும் காஷ்மீர் பல்கலைக்கழகம், கொல்கத்தாவின் ஏசியடிக் சொசைட்டி மற்றும் பிரயாக்ராஜில் இருக்கும் ஹிந்தி சாகித்ய சம்மேளனம் ஆகியவற்றின் ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது மாடியில் கீழ்த்திசை நூலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு முறைகளில் எழுதப்பட்ட 50,580 பனையோலைச் சுவடிகள், 22,134 காகித கையெழுத்துப் பிரதிகள் மற்றும் 25,373 குறிப்பு புத்தகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.