
தங்க நகைகள் பிடிக்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். கடந்த காலங்களில் விட தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர, உயர பெண்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் ஏன் இவ்வளவு நேசத்துக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பெண்ணின் குழந்தை பருவத்தில் இருந்து திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பல காரணங்களுக்காக இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் தங்கம் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தங்கம் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதத்தையும் தருவதாக நம்பப்படுவதால் தங்கத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது என்று சொல்லலாம். மேலும் தங்கம் திருமணங்கள் மற்றும் திருவிழாக்களின் போது அலங்கார, ஆடம்பரத்திற்காகவும் அணியப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தலைமுறை முதலீடாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய நகைகள் மற்றும் மத விழாக்களில் தங்கம் பயன்படுத்தப்பட்டுவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக பெண்களின் வாழ்க்கையில் தங்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். பெண்கள் திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் குடும்ப சடங்குகள் போன்ற பல்வேறு விழாக்காலங்களில் தங்கம் அணிந்திருந்தால் மட்டுமே இந்த சமூதாயத்தில் மரியாதையாக பார்க்கப்படுகிறது. குடும்ப விழாக்களில் நாம் அணிந்துள்ள தங்கத்தை வைத்தே நமக்கு மரியாதை கிடைப்பதை உணரலாம்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விலை அதிகரித்து, பின்னர் படிப்படியாக குறைந்த தங்கத்தின் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறுமுகத்தில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாளே அதிரடியாக ரூ.360 குறைந்து பெண்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,000தை கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்க முடியுமா என்ற கவலை பெண்களுக்கு அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஜனவரி 12-ம்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 58,520க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 22-ம் தேதி (இன்று) ரூ. 60,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ரூ. 1680 உயர்ந்துள்ளது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.