
தமிழ்திரையுலகில் பிரபலமான நடிகராக மட்டுமில்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் விஷால். அதேபோல் ஆரம்பகாலத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்த சுந்தர்.சி 1995-ம் ஆண்டு ’முறை மாமன்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். நகைச்சுவையைப் பிரதானமாக வைத்து படங்களை எடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி அனைத்து காமெடி நடிகர்களுடன் பணியாற்றிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இவர்களது கூட்டணியில் 12 வருடத்திற்கு முன் உருவான படம்தான் 'மதகஜராஜா'. இந்த திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு உருவான 'மதகஜராஜா' படம் பல பிரச்சினைகளில் சிக்கியதால் 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இப்படம் பல தடைகளைக் கடந்து, 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம்தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படம் முதல்நாளில் மட்டும் ரூ. 3.10 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ரூ.15 கோடி (ப்ரோமோஷன் செலவினம் உள்பட) பட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ படம் வெளியான முதல் 6 நாட்களில் மட்டும் ரூ.30 கோடியும், 8 நாட்களில் சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த காமெடி படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், இன்னும் சில நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை எட்டிவிடும் என்று திரை வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். 12 வருடங்கள் கழித்து பொங்கலுக்கு ரிலீசாகி மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் பட்டையை கிளப்புவதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
பொதுவாக நீண்ட காலத்திற்கு பிறகு வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றதில்லை என்ற குற்றச்சாட்டை தகர்த்தெறிந்து சாதனை படைத்து வருகிறது ‘மதகஜராஜா’ திரைப்படம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மதகஜராஜா திரைப்படம் தான் அதிக வசூலை குவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு படம் கிடப்பில் போடப்பட்டு சில ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டதை பார்த்திருக்கலாம், ஆனால், 13 வருடம் கிடப்பில் போடப்பட்ட ஒரு திரைப்படம் இன்றும் வசூலை குவித்து சாதனை படைத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த படமாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் கிடப்பில் இருந்து மீண்டும் திரையிடப்பட்டாலும் நல்ல கமர்ஷியல் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘மதகஜராஜா’ திரைப்படமே சாட்சியாகும்.
மக்கள் அதிகளவில் தியேட்டருக்கு வருவது இந்த படத்தின் வெற்றியை நிரூபித்திருப்பது மட்டுமல்லாமல் சுந்தர்.சி தான் ஒரு வெற்றிகரமான பொழுதுபோக்கு இயக்குனர் என்பதை இந்த படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் விஷாலின் கடின உழைப்பு முக்கிய காரணம் என்று இயக்குநர் சுந்தர் சி இந்த படத்தில் சக்ஸஸ் மீட்டின் போது நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.