
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே திறந்தவெளியில் பதவி ஏற்பு விழாவை நடத்துவது அங்கு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்த பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். மேலும் ஜோ பைடன், ஒபாமா, பில் கிளிண்டன், கமலா ஹாரீஸ், ஹிலாரி கிளிண்டன், எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர்.
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியும், அவருடைய மனைவி நீதா அம்பானியும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நீதா அம்பானி கட்டியிருந்த பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு புடவை தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இந்திய பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த புடவை வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற தலைசிறந்த நெசவாளர் பி. கிருஷ்ணமூர்த்தியால் இந்த புடவை நெய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தின் பிரமாண்ட கோவில்களின் ஆன்மீகம் மற்றும் வரலாற்று சாரத்தால் ஈர்க்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க பாரம்பரிய கருப்பொருள்கள் இடம்பெறும் வகையில் விரிவான ஆராய்ச்சியுடன் இந்த காஞ்சிபுரம் புடவை நெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுவைக் குறிக்கும் இருதலைபக்ஷி (இரட்டைத் தலை கழுகு), அழியாத தன்மையையும் தெய்வீகத்தையும் குறிக்கும் மயில் மற்றும் புராண சொர்க்கவாசலை குறிப்பிடும் வகையிலான விலங்குகள் போன்ற உன்னிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவங்களை கொண்டு இந்த புடவை நெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு பொருத்தமாக, மாணிக்கம், வைரம், முத்துக்களால் பதிக்கப்பட்ட 18-ம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய ஆபரணங்களை அணிந்து இந்தியாவின் கலாச்சார செழுமையை உலக அரங்கில் வெளிப்படுத்தினார் நீதா அம்பானி.
நீதா அம்பானி அணிந்திருந்த பாரம்பரிய புடவை நமது கைவினைஞர்களைக் கெளரவிக்கிறது மற்றும் அவர்களின் ஒப்பற்ற கைவினைத்திறன் மீண்டும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி இவரது ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் அடிக்கடி இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருபவர். பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற நீதா அம்பானி, எப்போதும் அவருடைய ஆடை மற்றும் அணிகலன்களால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். வெளிநாடுகளில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் நீதா அம்பானி புடவை அணிந்து, இந்திய கைவினைஞர்களின் பெருமையை உலகுக்கு கொண்டு சொல்ல தவறுவதில்லை.
நீதா அம்பானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக நடந்த தனிப்பட்ட வரவேற்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.