

தங்கம் விலை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அதிகரிக்க தொடங்கி இன்று வரை நிற்காமல் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் சிறிது குறைந்தாலும் கூட அடுத்துவரும் நாட்களில் வட்டியும் முதலுமாக சேர்த்து இரண்டு மடங்காக உயர்ந்து விடுகிறது.
அந்தவகையில் நேற்று(ஜனவரி 24-ம்தேதி) ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ஆயிரத்து 620 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 4,160 ரூபாய் அதிகரித்து உள்ளது.
வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3,55,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி தினமும் இருமுறை அதிகரிக்கும் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது சில நாட்கள் கழித்து வாங்கலாமா, நம்மிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய இது சரியான நேரமா என்பது குறித்த குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.
இதற்கிடையே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சில பொருளாதார நிபுணர்கள் இப்போது தங்கம் வாங்காமல் கொஞ்சம் காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
தற்போது தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 24 காரட் தங்கம் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்ந்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 ஆயிரத்தை தொட்டுவிடும்.
அந்த வகையில் இப்போது தங்கத்தின் விலை ரூ.15 ஆயிரத்தை எட்டிவிட்டது. அது இங்கிருந்து சரிந்தாலும் ரூ.12,500 வரை போகும். ஏனென்றால் வரும் நாட்களில் தங்கம் விலை 10 சதவீதம் வரை சரிய கண்டிப்பாக வாய்ப்புள்ளது. அதாவது டிரம்ப்பிற்கு நல்ல புத்தி வந்து கிரீன்லாந்தும் நாங்களும் நண்பர்கள் என்று திடீரென அறிவித்தால் தங்கம் விலை 10 சதவீதம் அப்படியே சரிந்து சர்வதேச சந்தையில் 4000 டாலர் வரை போகும். ஆனால் அதேநேரம் 2 குண்டை போட்டு போடுகிறேன் பார் என்று சண்டைக்கு போனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்னும் ஏறும். எனவே குறுகிய காலத்தில் தங்கம் விலை என்னவாகும் என்பது நமக்கு தெரியாது என்று கூறுகின்றனர்
இன்று தங்கமும் கிட்டத்தட்ட பங்குச்சந்தை போல ஏற்ற இறக்கம் என ஆகிவிட்டது. எனவே இன்று தங்கத்தை வாங்கி விட்டு 5 அல்லது 10 ஆண்டுகள் மறந்து விடுவேன் என்றால் மட்டுமே தங்கத்தில் தற்போது முதலீடு செய்வது நல்லது. அது அதிக லாபத்தை கொடுக்கும். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும்.
ஒருவேளை தங்கத்தின் விலை திடீரென சரிந்து ரூ.12,500க்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு உங்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தில் முதலீடு செய்து விடுங்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்த தெளிவான திசை இல்லை என்பதால் வேடிக்கை பார்ப்பதே நல்லது என்றும் கூறுகின்றனர்.
அதேசமயம், உங்கள் வீட்டில் திருமணம் அல்லது வேறு ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் தங்கம் வாங்குங்கள். இல்லையெனில் இப்போது சற்று காத்திருப்பதே சரியானது என்று பொருளாதார வல்லூநர்கள் கூறுகின்றனர்.
2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை போவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கையில் பணம் இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்யாமல் இருக்காதீங்க என்று கூறுகின்றனர்.
துணிச்சலான மனதைரியம் உள்ளவர்கள் இப்போது கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர். தங்கம், நம்பகமான மற்றும் ஈஸியான முதலீடு என்பதாலும், இனிவரும் காலங்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதாலும் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் கூறுகின்றனர். உங்களிடம் பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.
அதாவது உங்களிடம் 100 சதவீதம் பணம் இருந்தால் இதில் 75 சதவீதத்தை தங்கத்தில் முதலீடு செய்வது வரும் காலங்களில் அது 200 சதவீதமாக நிச்சயம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். 2026 ஆண்டு முடியும் வரைக்கும் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். பணம் இருப்பவர்கள் தைரியமாக இப்போது கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர். தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது குறுகிய காலத்தைவிட, நீண்ட கால முதலீடுகளே அதிக லாபத்தை தரும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி இதுகுறித்து கூறும்போது, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இனிவரும் காலங்களில் குறைவதற்கு வாய்ப்பே இல்லை அதிகரிக்கவே செய்யும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பாதிக்குமேல் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒன்றரை லட்சத்திற்கு மேலும், வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.5 லட்சமாகவும் உயரும் என்றும் கூறிய அவர், தற்போது கூட மக்கள் தங்கள் கையில் பணம் இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று கூறினார்.
டிஜிட்டல் தங்கம் இன்னும் வரைமுறை படுத்தப்படவில்லை. எனவே இது பாதுகாப்பானது இல்லை என்பதால் நல்ல மற்றும் நம்பகமான நிறுவனமாக பார்த்து முதலீடு செய்வது நல்லது என்றும் அவர் கூறினார்.
அதேபோல் வரும் நாட்களில் தங்கத்தில் விலை உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளால் அவசர தேவைக்காகவும், லாபம் பார்ப்பதற்காகவும் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய நினைப்பவர்கள் தற்போது விற்பனை செய்ய வேண்டாம் என்றும் இந்தாண்டு இறுதிவரை காத்திருப்பது நல்லது என்றும் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் நடுத்தர மற்றும் சாமானிய மக்களால் தங்கம் வாங்க முடியாது என்பதால் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்காமல் பாதுகாப்பாக வைத்திருப்பதே நல்லது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.