

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மாற்றமாக இருந்தது தங்கத்தின் விலை ஏற்றம். 2000 ம் ஆண்டு சவரன் ₹3,520 இருந்த தங்கத்தின் விலை சென்ற 2025ல் ₹1,36,570 (December) வரை உயர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் விர்ரென எட்டா உயரத்தை அடைந்தது. கடந்த ஒரே ஆண்டில் மட்டுமே தங்கம் விலை சுமார் 70%க்கு மேல் உயர்ந்ததால் வேறு எந்தவொரு முதலீடும் தரமுடியாத வரலாறு காணாத லாபத்தை அள்ளி கொடுத்திருந்தது தங்கம் எனலாம்.
கையிருப்பில் தங்கத்தை ஏற்கனவே வாங்கிச் சேமித்தவர்கள் மனதில் மகிழ்ச்சியும், இந்த வருடமாவது தங்கம் விலை குறைந்து பொட்டுத் தங்கமாவது வாங்க மாட்டோமா என ஏங்கியவர்கள் மனதில் ஏமாற்றமும் ஒருங்கே தந்தது தங்கம்.
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? தங்க முதலீடு லாபகரமாக இருக்குமா? விலை குறைந்தால் எந்தளவுக்குக் குறையும் என்பது போன்ற கேள்விகளுக்கு பலரும் அவரவர் கருத்தைப் பகிர்ந்து வரும் நிலையில் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனும் தனது யூடியூப் தளம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தபட்ச நிலையை எட்டிவிட்டது என்றே நினைக்கிறேன்.. இதே ட்ரெண்ட் தொடர்ந்தால் கொஞ்சம் குறையலாம். வெள்ளி விலையில் மாற்றம். அதேநேரம் இன்னுமே வெள்ளியில் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சற்றே உயரலாம். இருப்பினும், அமெரிக்காவில் இப்போது கிறிஸ்துமஸ்- புத்தாண்டு விடுமுறை. இதனால் மார்க்கெட் பெரிதாக இருக்காது. அடுத்த வாரம் தான் மார்கெட் சூடுபிடிக்கவே ஆரம்பிக்கும்.
2025ல் தங்கம், வெள்ளி இரண்டுமே உச்சம் தொட்டது. வெள்ளி இன்னுமே புதிய உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கம் விலை உச்சம் தொட்டுக் கொஞ்சம் குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகே 2025ல் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. 1979ல் இதே அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. இருப்பினும், அப்போது பெடரல் வங்கி கவர்னர் வோல்கர் (வட்டி விகிதத்தை உயர்த்தி) பிரஷர் போட்டார். இதனால் தங்கம் விலை கட்டுக்குள் வந்தது. இப்போதும் அதே அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது யாரும் வோல்கர் மாதிரி கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டார்கள்.
2026ல் கடந்தாண்டைப் போல லாபம் கிடைக்காது. அதில் பாதி அளவுக்கு லாபம் கிடைக்கலாம். ஏனென்றால், அமெரிக்க பெடரல் கூட்டத்தில் அடிதடி அளவுக்கு கருத்து மோதல் இருக்கிறது. ஒரு சிலர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். மற்றொரு தரப்பினர் வட்டி விகித குறைப்பு வேண்டாம் என்கிறார்கள். எனவே, 2026ல் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வட்டி குறைப்பு இருக்கும் என்கிறார்கள்.
அமெரிக்காவில் டாலர் மதிப்பு சரிவதால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழல்களில் வட்டி விகிதம் குறைக்கப்படாது. எனவே, அப்போது தங்கமும் மிக பெரியளவில் உயராது. அதற்காகத் தங்கம் விலை உடனே விழும் என்று அர்த்தமில்லை. ஆனால், கிராமுக்கு 18000- 19000 எனப் போவதற்குப் பதிலாக 14,000- 15,000 என போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை உயர்வு என்பது அமெரிக்க வட்டி குறைப்பு பொறுத்தே இருக்கும். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்.
அமெரிக்காவில் இப்போது பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கிறது. இதனால் அங்கு வட்டியைக் குறைக்க எந்தவொரு அவசியமும் இல்லை. எனவே, தங்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது சரியாக இருக்கும். 2025ஐ போல மிக பெரிய லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது முழுக்க முழுக்க ஆனந்த் சீனிவாசனின் கருத்து மட்டுமே என்பதையும் கவனிக்க வேண்டும். முதலீடு சார்ந்த முடிவுகளை உரிய பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட பிறகே எடுக்க வேண்டும்.
சரி தங்கம் தான் வாங்க முடியாது வெள்ளியிலாவது காசு போடலாமா? அதெல்லாம் முடியாது.. தங்கத்தை விட நான் பெரியவன் என அடம்பிடித்து வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு 1 கிலோகிராம் ₹7,900 இருந்த வெள்ளி விலை 2025ல் ₹2,09,000 (Dec 19 விலை) யுடன் இன்று ₹2,34,000 – ₹2,42,000 (சுமார் இந்திய மார்க்கெட்டில்) என உச்சம் தொட்டுள்ளது.விலையில் அதிக வளர்ச்சி 2020 ஆண்டிற்கு பிறகே ஏற்பட்டுள்ளது, குறிப்பாக 2023–2025 இடையில் விலை வெள்ளியின் விலையும் வேகமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல தங்கத்தின் ஏற்றம் 2000 முதல் 2024 வரையில் சீராக இருந்தது. 2024 மற்றும் 2025 ல் அதிரடியான அதிக விலை உயர்வுடன் அதிர்ச்சி அளிக்கிறது. 2024 இல் ₹78,000 இருந்தது, 2025 இல் ~₹1,10,000+ என அதிகரித்துள்ளது . ₹30,000+ (35%+) உயர்வு கடந்த 35 ஆண்டுகளில் ஒரே வருட இடைவெளியில் மிகப் பெரியதாகும். (18 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,445 இன்றைய விலை ஏற்றத்தில்)
எது எப்படியோ இனி தங்கம் , வெள்ளி யெல்லாம் பணக்காரர்கள் பெட்டியில் மட்டுமே என்பது நடுத்தர மற்றும் வறிய மக்களின் கருத்து.