சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். பொதுவாக கார்த்திகை 1 ஆம் தேதி பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். இருப்பினும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க, ஒரு சிலர் ஐப்பசி மாதமே மாலையணிந்து மலைக்குச் செல்வர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஐயப்ப பக்தர்களுக்காக, தமிழக அரசு சாரபில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள். ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை சபரிமலை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் கூட சபரிமலையில் உயிரிழக்கும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது தேவஸ்தானம். இந்நிலையில் தற்போது தமிழக அரசுடன் இணைந்து பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. சபரிமலை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டதன் பேரில், ஐயப்ப பக்தர்களுக்கு சுமார் 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை சபரிமலைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சபரிமலைக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இது தவிர தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழக அரசு, கேரள அரசுடன் ஒன்றிணைந்துள்ளது.
சபரிமலையில் நடக்கும் பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் புக்கிங் நேற்று தொடங்கியது. புக்கிங தொடங்கிய முதல் நாளே பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஆன்லைன் புக்கிங்கில் முன்பதிவு செய்துள்ளனர். வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி மகரவிளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் 16ஆம் தேதியன்று மாலை முதல் பூஜைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.