விரிவுபடுத்தப்படும் மெட்ரோ ரயில் சேவை..! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!

Metro Train Extension
Metro Train
Published on

சென்னையில் பொதுமக்களுக்கு இரயில் பயணம் தான் பிரதானப் போக்குவரத்தாக உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அதிவிரைவு இரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் வேலைக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் புறநகர் இரயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி மற்றும் சூலூர்பேட்டை வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி மற்றும் செங்கல்பட்டு வரையிலும் மின்சார இரயில் சேவை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க கடந்த சில ஆண்டுகளாக மெட்ரோ இரயிலும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது விம்கோ இரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை மெட்ரோ இரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்க மெட்ரோ இரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கு சென்னையின் முக்கிய இடமான பட்டாபிராம் வரை மெட்ரோ இரயில் சேவையை விரிவாக்கம் செய்ய மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்.

பட்டாபிராம் வரை மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டால், திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரும் இரயில் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக அமையும். இந்த இரயில் பாதை ஆவடி வழியாகச் செல்வதால், ஆவடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 22கி.மீ. நீளம் கொண்ட இரயில் பாதையில் 3 மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த மெட்ரோ இரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துடன் சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் மேற்கு புறநகர் மக்களின் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கேசி மருத்துவமனை, டன்லோப் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையம், அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இடையே 3 மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

திருத்தணி, அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பயணிகள் மின்சார இரயில் பயணத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இவர்கள் சென்ட்ரல் அல்லது கடற்கரை வழியாக வந்து, அங்கிருந்து பேருந்து அல்லது புறநகர் இரயில் வழியாக பணிக்குச் செல்கின்றனர். கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரை மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்பட்டால், மெட்ரோ இரயில் மூலம் நேரடியாக கோயம்பேடு, கிண்டி, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக பயணிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! இதைச் செய்தால் 20% தள்ளுபடி!
Metro Train Extension

ஆவடியில் CTH சாலையின் ஒருபுறத்தில் பேருந்து நிலையமும், மறுபுறத்தில் புறநகர் இரயில் நிலையமும் அமைந்துள்ளதால், இங்கு மெட்ரோ இரயில் அமைக்கப்பட்டால் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக ஆவடி மாறிவிடும். இதன்மூலம் பயணிகள் தங்களுக்கு ஏதுவான போக்குவரத்தைத் தேர்ந்தெடுத்து எளிதாக பயணிக்க முடியும். மேற்கு சென்னை மக்களின் நீண்ட நாள் கனவுக்கு மெட்ரோ நிர்வாகம் தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளது.

இதன்மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொதுமக்களுக்கு விரைவான பயண அனுபவமும் கிடைக்கும். கோயம்பேடு - பட்டாபிராம் இடையில் எங்கு, எத்தனை மெட்ரோ இரயில் நிலையங்கள் உருவாக்கப்படும் என்பதை பொதுமக்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவு செய்யப்படும் என மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
15 ஆண்டு கால காத்திருப்பு - விரைவில் வேளச்சேரி - பரங்கிமலை இரயில் சேவை தொடக்கம்..!
Metro Train Extension

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com