

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தலைமுடி உதிர்தல். பலருக்கும் இளம் வயதிலேயே தலைமுடி உதிர்ந்து வழுக்கையாக இருப்பது, அவர்களின் திருமணத்திற்கும் தடையாக இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் தலைமுடியை வளரச் செய்ய இளைஞர்கள் பெரும்பாலான வழிகளை மேற்கொண்டும், அதற்கு போதிய பலன் கிடைக்காத சூழலில் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் வழுக்கை தலையில் மீண்டும் முடியை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் இறங்கிய தைவான் ஆராய்ச்சியாளர்களுக்கு தற்போது வெற்றி கிட்டியுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் வெற்றியின் மூலம் வழுக்கை தலையில் வெறும் 20 நாட்களிலேயே தலைமுடியை மீண்டும் வளரச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஆண்கள் தான் வழுக்கை தலையால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். வழுக்கை ஏற்பட மரபணு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வாழ்க்கை முறை என பல முக்கிய காரணங்கள் உள்ளன.
* ஒரு குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால், அது பரம்பரையாக தொடரவும் அதிக வாய்ப்புள்ளது.
* ஆண்களுக்கு DHT (Dihydrotestosterone) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதாலும் முடி கால்கள் சுருங்கி வழுக்கை ஏற்படுகிறது.
* அதிகப்படியான மன அழுத்தமும் முடி உதிர்வை வேகப்படுத்தும்.
இந்நிலையில் செயலற்று கிடக்கும் Hair-Follicle ஸ்டெம் செல்களை மீண்டும் தூண்டுவதற்கான ஆராய்ச்சியில், தைவான் ஆராய்ச்சியாளர்கள் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த செல்களை தூண்டுவதற்கு தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு செல்கள் வெளியிடும் கொழுப்பு அமிலத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்
இது குறித்து தைவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “Hair-Follicle ஸ்டெம் செல்கள் செயலற்று இருப்பது தான் வழக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணம். இந்த செல்களை தூண்டுவதற்கு என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தோம்.
தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு செல்கள், அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட கொழுப்பு அமிலத்தை வெளியிடுவது வழக்கம். இந்த கொழுப்பு அமிலத்தைப் பயன்படுத்தி Hair-Follicle ஸ்டெம் செல்களைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதற்கு நல்ல பலன் கிடைத்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
இதன் மூலம் வழுக்கை தலையில் வெறும் 20 நாட்களிலேயே முடி வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அதிவேகமான முடி வளர்ச்சி இருக்கும் என்பதால், அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இதற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும்” என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.