
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தான் இன்று அதிக அளவில் உள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் கடந்து சில ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதன் விலை மட்டும் சற்று அதிகமாக இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு சுதந்திர தினத்தன்று ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி பொது மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். இதன்படி ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால், இருசக்கர மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் விலை வெகுவாக குறைந்தது. இருப்பினும் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாததால் அதன் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையானது.
இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களின் விலை சரிசமமாக இருக்கும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறுகையில், “ நம் நாடு ஓராண்டுக்கு சுமார் 22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தூய எரிபொருளுக்கு நாம் மாறினால் இந்த செலவை முழுமையாக குறைக்க முடியும். அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனாலை தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு 45,000 கோடி ரூபாய் அளவில் வருமானம் கிடைக்கும்.
தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதன் மூலமாக விவசாயிகளுக்கு குறிப்பிடத் தகுந்த அளவில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. விரைவில் முழுமையான இயற்கை எரிவாயுக்கு நம் நாடு மாறினால், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபத்தின் அளவு பன்மடங்கு உயரும்; அதோடு சுற்றுச்சூழல் வளமும் மேம்படும்.
தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களில் விலை சரிசமமாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற புதை படிம எரிபொருட்களை நம் நாடு சார்ந்திருப்பது, பொருளாதார அளவில் சுமையை ஏற்படுத்துகிறது. வெகு விரைவில் இந்த பொருளாதாரச் சுமையில் இருந்து இந்தியா விடுபட உள்ளது” என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்கள் பாதிப்படைகின்றன என்ற கருத்தை அமைச்சர் நிதின் கட்கரி முழுமையாக மறுத்துள்ளார். மேலும் எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகித்த வாகனங்கள் பாதிப்படைந்துள்ளன என்று ஒரு வாகனத்தையாவது காட்ட முடியுமா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.