
வேலைக்குச் செல்வோரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மாதந்தோறும் பிஎஃப் தொகையைப் பிடித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பிஎஃப் நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் பிஎஃப் நாமினியை சேர்த்தல் மற்றும் பிஎஃப் பணம் எடுத்தல் உள்ளிட்ட பல சேவைகளை வாடிக்கையாளர்களால் மிக எளிதாக அணுக முடியும்.
இதுதவிர தமிழ்நாட்டில் அவ்வப்போது ‘நிதி உங்கள் அருகில்’ என்ற பிஎஃப் குறைதீர்ப்பு முகாம்களையும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்த முகாமில் எண்ணற்ற பணியாளர்கள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 6 முக்கிய மாவட்டங்களில் ஒரே நாளில் குறைதீர்ப்பு முகாமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறைதீர்ப்பு முகாம்களில் வாடிக்கையாளர்களின் பிஎஃப் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிப்பது மட்டுமின்றி, ஆன்லைன் சேவைகளையும் வழங்குகிறது வருங்கால வைப்பு நிதி நிறுவனம். ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது, இஎஸ்ஐ தொடர்பான சந்தேகங்கள் பிஎஃப் இ-நாமினேஷன், பிஎஃப் பணம் எடுத்தல் மற்றும் பிஎஃப் உறுப்பினர்களின் விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் குறைதீர்ப்பு முகாம்களில் இலவசமாக வழங்கப்படும்.
சென்னை தவிர்த்து திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ‘நிதி உங்கள் அருகில்' என்ற குறைதீர்ப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வருகின்ற ஆகஸ்ட் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு குறைதீர்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
இந்த முகாமை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் உள்ள கூகுள் விண்ணப்பத்தை நிரப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
‘நிதி உங்கள் அருகில்' முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் முகவரி:
1. மதுரை: கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, எண். 1/132, நகரி முதல் சோழவந்தான் சாலை, இராயபுரம், சோழவந்தான், மதுரை - 625 234.
2. தேனி: கூட்ட அரங்கு, கண்ணம்மா மெஸ், கம்பம் மெயின் ரோடு, தேனி - 625 531.
3. இராமநாதபுரம்: இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, எண்.8A/10, சொக்கலிங்கபுரம் தெரு, இராமநாதபுரம் - 623 501.
4. சிவகங்கை: ஃபெமினா மஹால், சத்யமூர்த்தி தெரு, அரண்மனை வாசல், சிவகங்கை - 630 561.
5. திண்டுக்கல்: அக்ஷயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீலைப்பாடி, திண்டுக்கல் - 624 005.
6. விருதுநகர்: ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூர், விருதுநகர் - 626 203.
பிஎஃப் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் ஆன்லைன் செயல்முறைகளை குறைதீர்ப்பு முகாம்களில் தீர்த்துக் கொள்ளுங்கள். பிஎஃப் பணம் நம்முடைய இக்கட்டான சூழலில் கைகொடுக்கக் கூடியது.