
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸால், பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்களில் சாலையோர வியாபாரிகளும் முக்கியமானவர்கள். தினசரி நடக்கும் வியாபாரத்தை வைத்தே இவர்களின் வாழ்வாதாரம் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக தடைபட்டது.
இந்நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய அரசு 2020இல் ‘பிரதமரின் ஸ்வநதி திட்டத்தை’ கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.10,000 வரை பிணையற்ற கடன் தொகையை வழங்கியது. தவணையை சரியாகத் திருப்பி செலுத்தும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்த தவணைகளில் கடன் தொகையை உயர்த்தி வழங்கியது மத்திய அரசு.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் இத்திட்டத்தை 2030 மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்தது. இந்நிலையில் ‘ஸ்வநிதி 2’ என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் இந்த நிதியுதவித் திட்டத்தில் இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
முதல் தவணையை சரியாக திருப்பிச் செலுத்தும் பயனாளிகள் அடுத்த தவணையாக ரூ.20000 மற்றும் ரூ.50,000 மூலதனக் கடனை பெற தகுதி பெறுவார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்க 7% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. அதோடு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க கேஷ்பேக் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் ஒரு நிதி உதவி திட்டம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பிரதமரின் ஸ்வநிதி திட்டம் இருக்கிறது.
கடந்த 2023ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் சாலையோர வியாபாரிகள், இந்த நிதியுதவித் திட்டத்தை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு குறைந்த அளவிலான பட்ஜெட்டையே ஒதுக்கி இருந்தாலும், வியாபாரிகள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சிறிய அளவில் கடன் வழங்கி பிறகு அதனை திருப்பிச் செலுத்துவதன் மூலம், பெரிய கடன்களை வழங்குவதால் வியாபாரிகளின் நிதி ஒழுக்கமும் மேம்பட்டுள்ளது.
மோசமான கொரோனா வைரஸ் காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருந்த இத்திட்டம், அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகளையும் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஸ்வநிதி 2’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இதுவரை கடன் தொகையைப் பெறாத சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதை இத்திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகபட்ச கடன் வரம்புகள், மிக எளிமையான வழிமுறைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றையும் இத்திட்டத்தில் அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் இன்னும் பெரும்பாலான சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.