
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டீ, காபியின் விலை ஏறியது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில், தற்போது சத்தமின்றி பல உணவகங்களில் இட்லி மற்றும் தோசை உள்ளிட்ட உணவுகளின் விலை ஏறியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக அமைப்பு சார்ந்த உணவகங்கள் 50,000-க்கும் அதிகமாக உள்ளன. இதுதவிர சாலையோர டிபன் கடைகளும் எக்கச்சக்கமாக உள்ளன.
சமீபத்தில் இந்த உணவகங்களில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை உணவுகளின் விலை ஏறியுள்ளது. குறிப்பாக சைவ உணவுகளின் விலை தான் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
சைவ உணவகங்களில் பொங்கல், தோசை, இட்லி மற்றும் பூரி உள்ளிட்ட டிபன் வகை உணவுகளும், மஷ்ரூம் பிரியாணி மற்றும் பனீர் பிரியாணி உள்ளிட்ட சைவ பிரியாணி உணவுகளும், மதிய சாப்பாடும் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவ உணவுகளைப் பொறுத்த வரை சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன், இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கேஸ் சிலிண்டர், மின் கட்டணம், கடை வாடகை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கித் தான் உணவுகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் உள்ள பல உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், பரோட்டா மற்றும் பூரியின் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
ஆனால் இந்த காலக்கட்டத்தில் வணிக சிலிண்டர் விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் பெரிதாக உயரவில்லை. இருப்பினும் உணவுப் பொருட்களின் விலை மட்டும் உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கோபி, மஷ்ரூம், புலாவ் மற்றும் பனீர் பிரியாணியின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்து, ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. சிக்கன் பிரியாணி ரூ.200 முதல் ரூ.350 வரையும், மட்டன் பிரியாணி ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்கப்படுகின்றன. அசைவ உணவுகளுக்கு இணையாக சைவ உணவுகளின் விலை அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உணவுகளின் விலையைக் குறைக்கவும், உணவுகளை சரியான அளவில் வழங்குவதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்களும், வேலைக்குச் செல்வோரும் அதிகம் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.