
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சநீதிமன்றம உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.75 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்பட்டது. இருப்பினும் உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை என தமிழக அரசு ஆசிரியர்களுக்கு நம்பிக்கை அளித்தது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதோடு நீண்ட காலம் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது தான் சரியாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசும் விரைவில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி சீராய்வை மனுவைத் தாக்கல் செய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா, கேரளா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன. இந்நிலையில் இந்தப் பட்டியலில் தமிழ்நாடு அரசும் இணைந்திருப்பது ஆசிரியர் சங்கங்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்த ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். ஓய்வு பெறுவதற்கு ஒருசில ஆண்டுகளே உள்ள ஆசிரியர்களுக்கும், பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடையாத ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், தமிழக அரசின் ஆதரவு இருப்பதால் தற்போது ஆசிரியர்கள் நிம்மதியாக உள்ளனர்.