

இந்தியாவில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை கால நேரங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இச்சமயங்களில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ளவே பலரும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர். ஆனால் பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் காரணமாக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் பயணிகள் உள்ளனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுத்து, பயணிகளின் சிரமத்தைப் போக்கும் விதமாக ரயில்வே துறை ‘யாத்ரி சுவிதா கேந்திரா’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பிரத்யேக நுழைவாயில் அமைக்கப்படும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘யாத்ரி சுவிதா கேந்திரா’ திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக தலைநகர் டெல்லி ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இங்கு 5,281ச.மீ. பரப்பளவில் தனிப்பகுதி அமைக்கப்பட்டு, 120 இருக்கைகள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 22 டிக்கெட் கவுன்டர்கள், 18 மின்விசிறிகள், 17 சிசிடிவி கேமராக்கள், 5 லக்கேஜ் ஸ்கேனர்கள், ஆர்.ஓ. குடிநீர், வைபை இணைய வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தனை சிறப்பு வாய்ந்த திட்டத்தை நாடு முழுவதும் கூட்ட நெரிசல் அதிகமிருக்கும் 76 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னையின் முக்கிய ரயில் நிலையமான எழும்பூர் மற்றும் ஆந்திராவின் திருப்பதி ரயில் நிலையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ரயில்வே பணியாளர்கள், பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் மற்றும் வியாபாரிகள் என பலரும் கூடுவதால் அதிகம் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கவும் யாத்ரி சுவிதா கேந்திரா திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்படி முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதலில் நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்யாத பயணிகள் மற்றும் வியாபாரிகள் இனி நேரடியாக உள்ளே நுழைய முடியாது. ரயில் நிலையத்தில், கடை வைத்திருப்போர், ரயில்வே ஒப்பந்ததாரர்கள், பிளாட்பார வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள் கொடுக்கப்படும். இதன்படி அதிகாரபூர்வ அனுமதி உள்ளவர்கள் மட்டுமே நேரடியாக ரயில்வே பிளாட்பாரத்திற்குள் நுழைய முடியும்.
ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரபூர்வமற்ற வழிகள் அனைத்தும் மூடப்படும் என்பதால், யாராலும் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது. இதன்மூலம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு சுமுகமான அணுகுமுறை உருவாக்கப்படும்.
இந்தியாவில் பாட்னா, மும்பை, புவனேஸ்வர், கான்பூர், ஆக்ரா, குவஹாத்தி, செகந்திராபாத், ஹவுரா, தர்பங்கா, டெல்லி நிஜாமுதீன், டெல்லி ஆனந்த் விகார், மதுரா, கோரக்பூர், எழும்பூர் மற்றும் திருப்பதி உள்ளிட்ட 76 ரயில் நிலையங்கள் யாத்ரி சுவிதா கேந்திரா திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.