
தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உள்பட சிலருக்கு கட்டணமில்லா இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில், இனி ஆன்லைன் வாயிலாகவே பயணிகள் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி ஆன்லைனில் பஸ்பாஸ் பெறும் திட்டம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஏற்கனவே பஸ்பாஸ் எடுத்து வைத்துள்ள நபர்களுக்கு, அவர்களின் பஸ்பாஸ் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து துறை.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அறிவுசார் திறன் குறைபாடு உடையவர்கள், தமிழறிஞர்கள் மற்றும் கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டம் செயலில் உள்ளது. இத்திட்டத்தின் படி மாதந்தோறும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பஸ்பாஸை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதற்காக இவர்கள் அனைவரும் அருகிலிருக்கும் பேருந்து முனையத்திற்கு நேரடியாக வர வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் இலவச பஸ்பாஸ் பெறும் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கம் செய்வதன் மூலம் பொதுமக்களின் நேர விரயத்தைக் குறைப்பதோடு, அலைச்சலும் தவிர்க்கப்படும். இதனால் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன், தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக்கழகம் கூட்டு சேர்ந்து ஆன்லைனில் பஸ்பாஸுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பயணிகள் இலவச பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் மாதத்திற்கு ஏற்கனவே பஸ்பாஸ் பெற்று வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் பஸ்பாஸ் செப்டம்பர் 30 உடன் முடியவடையும். இவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக இந்த பஸ்பாஸ் அடுத்த மாதம் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இவர்கள் ஆன்லைனில் பஸ்பாஸ் பெற விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று பயணிகள் ஆன்லைனில் பஸ்பாஸுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.