

ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க, மாநில மற்றும் மத்திய அரசுகளால் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டமும், மாநில அரசின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் (TNHB) ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி அளித்து வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற வாழ்விட வாரியத் திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவைக் குறைக்கும் வகையில், ரூ.76 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் தமிழ்நாடு முழுக்க எண்ணற்ற மக்கள் பயன் பெறுவார்கள்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வழியாக தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் திட்டத்திற்கு ஏற்ப மத்திய அல்லது மாநில அரசுகளின் பங்களிப்பு இதில் 90% இருக்கும். மீதமுள்ள 10% பணத்தை பயனாளிகள் தான் செலுத்த வேண்டும்.
இருப்பினும் இந்தத் தொகை சற்று அதிகமாக இருப்பதால், ஏழை மக்கள் பலரும் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். இந்நிலையில் பயனாளிகளின் இந்த செலவைக் குறைக்கும் விதமாக தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயனாளிகள் 10 சதவீதமாக குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சத்தை செலுத்த வேண்டி இருப்பதால், நகர்ப்புற வாழ்விட வாரியம் வங்கிக் கடனைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருகிறது. இந்நிலையில் மத்திய அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், பயனாளிகளின் பங்குத் தொகையை தமிழக அரசே ஏற்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட அதிகாரிகள் கூறுகையில், “வீட்டு வசதித் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதனை கட்டி முடிக்க முடியாமல் திணறும் ஏழை மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது. இதன்படி பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 10% பங்குத் தொகை அளிக்கப்பட உள்ளது.
நகர்ப்புற மற்றும் ஊரமைப்புத் துறையில் கட்டுமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதலை வழங்கும் போது, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு இவ்வகையில் ஆண்டுதோறும் ரூ.680 கோடி வரை லாபம் கிடைக்கிறது. இந்த லாபத்தில் இருந்து ரூ.76.66 கோடியை, நகர்ப்புற வாழ்விட திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் பங்குத் தொகை செலவுக்கு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
கரூர், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தலா 1 இடம், சென்னையில் 7 இடம் என மொத்தமாக 10 குடியிருப்புத் திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடாக இந்த நிதி வழங்கப்பட உள்ளது. இதனால், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் பங்குத் தொகையில், 70% முதல் 90% வரை குறைய வாய்ப்புள்ளது.
இதன்மூலம் சென்னை, கரூர், திருநெல்வேலி மற்றும் மதுரை நகரங்களில் சுமார் 3,908 பயனாளர்கள் பயன் பெறுவர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலரான காகர்லா உஷா இந்தத் திட்டத்திற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.